“நீங்க கண்டிப்பா வரணும்!”.. திமுகவுக்கு ஜி.கே.வாசன் விடுத்த முக்கியமான கோரிக்கை!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என திமுக அறிவித்துள்ள நிலையில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், திமுகவுக்கு ஒரு முக்கியமான கோரிக்கையை விடுத்துள்ளார்.சென்ட்ரல் விஸ்டா என்ற புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 டிசம்பரில் அடிக்கல் நாட்டினார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டத்தின் பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், இதன் திறப்பு விழா வரும் 28-ஆம் தேதி நடப்பதாகவும், பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாட்டின் குடியரசுத் தலைவர் தான் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. இதை வலியுறுத்தி நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.அதேசமயம், அதிமுக, தமாகா, பாமக உள்ளிட்ட கட்சிகள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளன. ஜனநாயகத்தின் மையமான நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று பாஜக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், திமுக இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் வளர்ச்சியையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நாடாளுமன்றக் கட்டிடத்தை கட்சி, அதை திறப்பது ஆட்சியாளர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு எடுத்துக்காட்டாகும். இதை பிரதமர் திறந்து வைப்பது ஜனநாயகத்துக்கு உட்பட்டதுதானே தவிர, நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரானது அல்ல.புதிய நாடாளுமன்றக் கட்டிடம் வரும் 100 ஆண்டுகளுக்கு மேல் எவ்விதமான இடையூறுமின்றி, நவீனத் தொலைதொடர்பு வசதிகளுடன் செயல்படும். இதில் முக்கிய அம்சமாக, தமிழ்நாட்டில் இருந்து 75 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட செங்கோலை வைக்க உள்ளனர். இந்த செங்கோல், ஆட்சி நேர்மையானதாகவும், நீதி பிறழாமல் அமைய வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.செங்கோல் தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கக் கூடியதாகும். இது தமிழகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், பறைசாற்றுகிறது. எனவே, தமிழ்நாட்டை ஆளும் கட்சியான திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடனும், அக்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் வரலாற்றுச் சிறப்பு மிக்க புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு, பெருமை சேர்க்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *