இந்து கோயில்கள் மீதான தாக்குதல்: ஆஸ்திரேலிய பிரதமரிடம் மீண்டும் முறையிட்ட பிரதமர் மோடி

 -ஊடகவியலாளர் இராகவேந்திரன்

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட இந்து கோயில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்தும், அந்நாட்டில் காலிஸ்தான் ஆதரவு சக்திகளின் செயல்பாடுகள் குறித்தும் அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸிடம் பிரதமர் மோடி இன்று மீண்டும் இந்தியாவின் கவலைகளை தெரிவித்தார்.

மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கிறார். அதன்படி, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸும் பிரதமர் மோடியும் இன்று (புதன்கிழமை) சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தினர். பரந்த அளவிலான இந்தப் பேச்சுவார்த்தையில், இருதரப்பு வர்த்தக உறவுகளை குறிப்பிடத்தக்க வகையில் விரிவாக்கும் நோக்கத்தில் ஒரு விரிவான கூட்டுப் பொருளாதார ஒப்பந்தத்தில் கவனம் செலுத்துவதற்கு இரண்டு நாட்டு பிரதமர்களும் முடிவு செய்துள்ளனர்.

இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நானும், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸும் முந்தைய எங்கள் சந்திப்புகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்து கோயில்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும், பிரிவினைவாத சக்திகளின் செயல்பாடுகள் குறித்தும் விவாதித்திருக்கிறோம், இன்றும் விவாதித்தோம். இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உறவுகளில் தங்களின் செயல்கள் மற்றும் சித்தாந்தங்களின் மூலம் விரிசல் ஏற்படுத்துவதை எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அல்பானிஸ் இன்று மீண்டும் என்னிடம் உறுதியளித்திருக்கிறார்.

இந்த ஓராண்டில் எங்களிடையே நடக்கும் ஆறாவது சந்திப்பு இது. இதன்மூலம் எங்களின் விரிவான உறவின் ஆழமும், இரு தரப்பு உறவின் முதிர்ச்சியும் வெளிப்படுகிறது. கிரிக்கெட் மொழியில் கூறவேண்டுமென்றால், எங்களின் உறவு டி20 மோடுக்குள் நுழைந்திருக்கிறது. இரு தரப்பிலிருந்தும், சுரங்கங்கள் மற்றும் முக்கியமான கனிமவளங்கள் குறித்து ராஜாங்க ரீதியிலான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இரு தரப்பிலும் பசுமை ஹைட்ரஜன் துறையில் கவனம் செலுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தோணி அல்பானிஸ் தனது அறிக்கையில், பெங்களூருவில் ஆஸ்திரேலியாவின் துணை தூதகரம் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்புக்கு முன்னதாக, சிட்னியில் உள்ள அட்மிரால்டி ஹவுசில் பிரதமர் மோடிக்கு முறைப்படி மரியாதை அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *