“சூழ்கிறது மேகங்கள்”! குஷியில் சிறுத்தைகள்!- எடப்பாடி + திருமாவளவன்.. -ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

அதிமுக கூட்டணியில் விசிக கூட்டணி வைக்க போகிறதா? என்ற செய்திகள் அடிக்கடி பரபரத்து வர, இன்னொரு முக்கிய தகவல் ஒன்று வட்டமடித்து கொண்டிருக்கிறது.பாஜகவை தொடர்ந்து சாடி வருபவர் விசிக தலைவர் திருமாவளவன்.. மேலும், பாஜகவின் அபாயம் குறித்து எடுத்துகூறி, அதிமுகவை எப்போதுமே அலர்ட் செய்தபடியே வருகிறார் திருமா.ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் இந்த பாஜகவினர்.. அதற்குள் எல்லாரும் ஒன்று சேர வேண்டும்.. தவறவிட்டால், மறுபடியும் 2024-ல் ஆபத்து ஏற்படும் என்று கூறிவருகிறார். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அதிமுகவுக்கு மட்டும் பாதிப்பில்லை, தமிழ்நாட்டிற்கே பாதிப்பு. பாஜகவை கழற்றிவிட வேண்டும். பாஜக இல்லாமல் அதிமுக தேர்தலை சந்திப்பது அதிமுகவுக்கும் நல்லது. தமிழ்நாட்டிற்கும் நல்லது என்று வெளிப்படையாகவே சொல்லி வருகிறார்.குறிப்பாக, “அதிமுக இடத்தில் பாஜக வந்து உட்கார்ந்து கைப்பற்ற நினைக்கிறது. அங்கே பாஜக வரக்கூடாது என்றால், அதிமுக வலுவாக இருக்க வேண்டும்.. அதிமுக இப்போது 3 அணியாக சிதறி கிடப்பதற்கு பாஜகதான் காரணம்.. பாஜக மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையில் ஒரே அதிமுகவாக இருந்திருக்கும்.. பாஜக தலையீட்டால் சசிகலா, தினகரன் ஓரங்கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைந்தனர்.. இப்போது அவங்களையும் உடைத்து விட்டார்கள்” என்றும் திருமாவளவனின் எச்சரிக்கையும், ஆதங்கமும், அக்கறையும் தொடர்ந்தபடியே உள்ளது.

திருமாவளவனின் இந்த பேச்சை வைத்து, ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி வைக்க போகிறாரோ என்றும் யூகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டும் வருகின்றன.. எனினும் திமுகவுடனான கூட்டணியை திருமாவளவன் உறுதிப்படுத்தி கொண்டே இருக்கிறார்.. இப்போது, அதிமுகவின் மதுவிலக்கு போராட்டத்துக்கு ஆதரவும் தெரிவித்துள்ளார்.. இதைவைத்தும், அதிமுகவுடன் விசிக கூட்டணியா? என்றும் சிலர் கேள்விகளை கிளப்பி விட்டுள்ளனர். விசிகவை பொறுத்தவரை, திமுக அரசை எந்த அளவுக்கு ஆதரிக்கிறதோ, அதே அளவுக்கு எதிர்க்கவும் செய்கிறது.. இன்னும் சொல்லப்போனால், திமுக அரசை கண்டித்து அதிக அளவு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது விசிகதான் என்பதை மறுப்பதற்கில்லை.. அப்படியானால், வேங்கைவயல் விவகாரத்தில், திமுக அரசை பெரிதாக கேள்வி கேட்கவில்லையே, எதிர்ப்புகளை பதிவு செய்யவில்லையே என்றும் சிலர் கேள்விகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்..சீமான் ஒருபடிமேலேபோய், “முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து, வேங்கைவயல் விவகாரத்தில் போராட்டம் செய்வாரா அண்ணன் திருமாவளவன்?” என்றும் கேட்டிருந்தார்.இப்படி கூட்டணி விவகாரங்கள் ஒருபக்கம் இருந்தாலும், தேர்தல் பணியில் வேகம் எடுத்து வருகிறது விசிக.. இன்று தமிழகத்தில் வாக்குகளை தீர்மானிக்கும் மிக முக்கிய சக்தியாக விசிக இருப்பதால், அதற்கான முக்கியத்துவமும் களத்தில் பெருகி வருகிறது. அந்தவகையில், வரும்எம்பி தேர்தலில் திருமாவளவன் எங்கே போட்டியிட போகிறார்? என்ற எதிர்பார்ப்புகளும் எகிறி வருகின்றன.. இன்னும் தேர்தலுக்கு காலம் இருக்கிறது என்றாலும்கூட, இதுகுறித்த யூகங்கள் இணையத்தில் கசிந்துவருவதை தவிர்க்க முடியவில்லை..

அந்தவகையில், திருவள்ளூர் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட நிறைய வாய்ப்புகள் உள்ளதாக சொல்கிறார்கள். அதேபோல, சிதம்பரம் தொகுதியில், திமுக கொள்கை பரப்பு செயலர் ஆ.ராசா போட்டியிட திட்டமிட்டுள்ளவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரத்தில் அக்கட்சி பொதுச்செயலர் ரவிகுமாரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்… இதில், சிதம்பரம்,விழுப்புரம் அருகருகே உள்ள தொகுதிகள் என்பதால், இருவருமே எம்பியாக இருந்தும், வட மாவட்டங்களில் கட்சியை வலுவாக கட்டமைக்க முடியவில்லை என்ற எண்ணம் உள்ளதாக தெரிகிறது.அதுவும் இல்லாமல், ஏற்கனவே, 2 முறை சிதம்பரம் தொகுதியில், திருமாவளவன் வெற்றி பெற்று விட்டார்… அந்த தொகுதியை தாண்டி, விசிக பரவலாக தமிழகமெங்கும் இன்னும் அழுத்தமாக கால் ஊன்ற வேண்டும் என்பதற்காகவே தொகுதி மாற உள்ளதாக சொல்கிறார்கள்.. அதனால்தான், கதிருவள்ளூர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக காரணம் கூறப்படுகிறது.. இதுகுறித்து வெளிப்படையான முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றாலும், களப்பணியை தமிழகமெங்கும் தீவிரப்படுத்தி வருகிறார்கள் திருமாவின் சிறுத்தைகள்.. அடு்தது என்ன நடக்க போகிறது? தெரியவில்லை பார்ப்போம்..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *