கள்ளச் சாராய சாவுகள்-சிபிசிஐடி விசாரணைக்கு அதிரடி உத்தரவு

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு சிறந்த சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுளேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் நேற்று முன்தினம் கள்ளச் சாராயம் குடித்த 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், சங்கர், சுரேஷ், தரணிவேல், ராஜமூர்த்தி, மலர்விழி, மண்ணாங்கட்டி ஆகிய ஆறு பேர் நேற்று உயிரிழந்தனர்.இந்நிலையில், முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதான விஜயன், 40 வயதான சரத்குமார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். இதனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 36 பேர், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து, முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார். கள்ளச்சாராய மரணம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 4 மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். கள்ளச்சாராயம் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் டாஸ்மாக் கடை பாட்டிலில் கள்ளச்சாராயம் அடைத்து விற்பனை செய்துள்ளனர். கள்ளச்சாராயம் விற்றவர் அதில் மெத்தனால் எரிசாராயத்தை பயன்படுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். கள்ளச்சாராய மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும். மேலும் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராயம் விற்பனையை கண்காணிக்க தவறியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *