ஆர்ப்பாட்டம் இன்றி சிக்ஸ் அடித்த சசிகாந்த் செந்தில்!பாஜகவை வீழ்த்தியது எப்படி?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பணியாற்றியவர்களில் முக்கியமான நபராக அம்மாநில தேர்தல் பொறுப்பாளர் தமிழ்நாட்டை சேர்ந்த சசிகாந்த் செந்தில் பார்க்கப்படுகிறார்.கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.நேற்று அங்கு எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மஜத மொத்தம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக அக்கட்சி நிர்வாகி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் பணியாற்றினார். இவர் சமூக வலைதள பிரச்சாரம், ஊடகங்களில் பிரச்சாரம் செய்வது, விளம்பரம் கொடுப்பது, நவீன வகையிலான பிரச்சாரங்களை மேற்கொள்வது போன்ற பணிகளை கவனித்துக்கொண்டார். இவரின் சிறப்பான பணிகள் காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றுள்ளது. தனக்கு கீழே பெரிய டீம் வைத்துக்கொண்டு சத்தமே இன்றி இவர் தேர்தல் பணிகளை செய்தது காங்கிரஸ் கட்சியின் மேலிட கவனத்தை ஈர்த்து உள்ளது.சென்னையைச் சேர்ந்தவர் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். இவர் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார். 2009ல் ஐஏஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இவருக்கு போஸ்டிங் போடப்பட்டது. உதவி ஆணையராக இவர் பணியாற்றினார். அங்கேயே தொடர்ந்து பணியாற்றி வந்தவர், சுரங்கம் மற்றும் நிலவியல் துறையின் இயக்குநராக 2016ல் பதவி உயர்வு பெற்றார். இவர் பதவியில் இருந்த போது பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வந்ததாக கூறப்படுகிறது. பாஜகவின் சில கோரிக்கைகளை இவர் கேட்க மறுத்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கு தலையாட்டி பொம்மையாக இல்லமால் இவர் நேர்மையான தலைவராக இருந்துள்ளார். முக்கியமாக தக்சின் கர்நாடகாவில் பணியாற்றிய சமயத்தில் பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வந்ததால் அவர் பதவியை ராஜினாமா செய்து மோடி மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.

முக்கியமாக பிரதமர் மோடி மீது நேரடியாக பல குற்றச்சாட்டுகளை சசிகாந்த் செந்தில் அப்போது வைத்தார். அங்கே பாஜக பல ஊழல்களை செய்வதாகவும் கூறினார். இதையடுத்து காங்கிரசில் சேர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனார். அவரின் பணி மற்றும் கர்நாடகாவில் அவருக்கு இருக்கும் அனுபவம் இரண்டையும் மெச்சும் விதமாக கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராக அவருக்கு பதவி வழங்கப்பட்டது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார திட்டங்களை வகுப்பது. தேர்தல் பணிகளை திட்டமிடுவது, வேட்பாளர் தேர்வில் முடிவுகளை எடுப்பது, வாக்குறுதியை உருவாக்குவது என்று பல பணிகளை செய்தார். முக்கியமாக கர்நாடக களம் இவருக்கு தெரியும் என்பதால் அந்த பணிகளில் இவர் கவனம் செலுத்தினார்.முக்கியமாக நவீன ஆன்லைன் பணி, சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்வது, வேட்பாளர்கள் பற்றிய இமேஜை உருவாக்குவது என்று சிறப்பான பணிகளை மேற்கொண்டார். இவரின் சிறப்பான பணி காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றுள்ளது. இன்னொரு பக்கம் அண்ணாமலை நிர்வகித்த பாஜக தோல்வி அடைந்து உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக – காங்கிரஸ் போட்டிக்கு இணையாக அங்கே சசிகாந்த் – அண்ணாமலை இடையிலான போட்டி பெரிதும் கவனிக்கப்பட்டது. இந்த போட்டியில் இறுதியில் என்னவோ சசிகாந்த் தான் வெற்றிபெற்றுள்ளார். கர்நாடகாவில் எஸ்பி மற்றும் கூடுதல் எஸ்பியாக இருந்தவர் அண்ணாமலை. கர்நாடக அரசியல் தலைவர்கள்.., அதாவது எடியூரப்பா போன்ற தலைவர்களுக்கு இந்த தேர்தல் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இது முக்கியமான தேர்தல். இவர் தமிழ்நாடு பாஜக தலைவர் என்றாலும் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் அங்கே தேர்தல் துணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.அரசியல் ரீதியாக அண்ணாமலை இதுவரை தன்னை நிரூபிக்கவில்லை. இந்த தேர்தலில்தான் அவர் தனது பலத்தை நிரூபிக்க முடியும் என்பதால் அவரின் தேர்தல் பணிகள் தீவிரமாக கவனிக்கப்பட்டது. ஆனால் அங்கே அண்ணாமலைக்கு கீழ் பாஜக கடுமையான தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *