‘ஆபரேஷன் காவேரி’ மூலம் சூடானில் இருந்து மேலும் 186 இந்தியர்கள் மீட்பு: இதுவரை 3,000 பேர் நாடு திரும்பினர்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றி உள்ளது. வாக்குறுதி அளித்தபடி குறிப்பிட்ட காலத்தில் ஆட்சி அதிகாரத்தை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்காததால் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையிலேயே மோதல் தொடங்கியது. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இந்திய விமானப் படையின் சி-130 விமானம், ஐஎன்எஸ் சுமேதா கப்பல் ஆகியவற்றின் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இதில் சவுதி அரேபியாவும் உதவி செய்து வருகிறது. சூடானில் இருந்து மீட்கப்படும் இந்தியர்கள் சவுதியின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து இந்தியாவின் பல நகரங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

தற்போது 186 இந்தியர்கள் ஜெட்டாவில் இருந்து நேற்று கேரள மாநிலம் கொச்சிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை சூடானில் இருந்து 3,000 பேர் மீட்கப்பட்டு இந்தியா திரும்பி உள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *