அது ‘மவுனமான குரல்’ – பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி பற்றி காங்கிரஸ் விமர்சனம்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

பிரதமர் மேடியின் 100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்காக அவரது மக்கள் தொடர்பு எந்திரம் கூடுதல் நேரம் வேலைபார்ப்பதாகவும், ஆனால் அது அதானி குழுமம், சீன விவகாரங்கள், சத்தியபால் மாலிக் பேச்சு போன்ற தீவிரமான விஷயங்களில் மவுனமாக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பிரதமர் மோடி, மாதம்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். வரும் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி தனது 100 பகுதியை நிறைவு செய்கிறது. மனதின் குரல் நிகழ்ச்சியின் வெற்றிக்கு மக்களின் ஆதரவுதான் காரணம் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், இந்த நிகழ்ச்சி மவுனமான குரல் என்று காங்கிரஸ் கட்சி விமர்ச்சித்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”பிரதமரின் வலிமை மிக்க மக்கள் தொடர்பு எந்திரம், ஏப்.30-ம் தேதி நிகழ்த்த இருக்கு 100-வது மனதின் குரல் நிகழ்ச்சிக்காக கூடுதல் நேரம் உழைத்து வருகிறது. இருந்தபோதிலும், அதானி, சீனா விவகாரங்கள், சத்தியபால் மாலிக் பேச்சு, எம்எஸ்எம்இ அழிவு போன்ற தீவிரமான விஷயங்களில் அது மவுனமாகவே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த நிகழ்ச்சி குறித்து இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) ரோக்தக் மாணவர்கள் இணைந்து ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளனர். அதன்படி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் மனதின் குரல் நிகழ்ச்சியை சுமார் 23 கோடி பேர் கேட்கின்றனர். இதில் 65 சதவீதம் பேர் இந்தியில் அதை கேட்க விரும்புகின்றனர்.

மொபைல் போன்களைத் தொடர்ந்து, தொலைக்காட்சி வழியாகவும் இந்த நிகழ்ச்சி கேட்கப்படுகிறது. நிகழ்ச்சியைக் கேட்போரில், 17.6 சதவீதம் பேர் வானொலி வழியாக மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

மேலும், இந்த கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்களில் 73 சதவீதம் பேர் அரசின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், 58 சதவீதம் பேர் தங்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பதாகவும், 59 சதவீதம் பேர் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பதிலளித்தவர்களில் 63 சதவீதம் பேர் அரசாங்கத்தின் மீது நேர்மறை எண்ணம் கொண்டிருப்பதாகவும், 60 சதவீதம் பேர் நாட்டை உருவாக்குவதில் பங்கேற்க விரும்பம் தெரிவித்திருப்பதில் இருந்து அரசாங்கத்தின் மீதான நல்லெண்ணம் அதிகரித்திருப்பது தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *