ஓபிஎஸ் பேசும்போது..‘கத்தி’ உடன் மேடையை நெருங்கிய நபர்..என்னாச்சு?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் கத்தியுடன் ஒருவர் மேடைக்கு அருகே முண்டியடித்துக்கொண்டு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி கிட்டத்தட்ட கடந்த ஓராண்டாக தொடர்ந்து வருகிறது. இதில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கட்சி, சின்னம், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது என எச்சரித்தனர்.இதற்கிடையே, நீதிமன்றத்தில் தொடர் பின்னடைவைச் சந்தித்த ஓபிஎஸ், மக்கள் மன்றத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்க முடிவு செய்தார். திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடைபெறும் என அறிவித்தார். திருச்சி பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் அவரது ஆதரவாளர்கள் 25 ஆயிரம் பேர் பங்கேற்க, ஓபிஎஸ் அணியின் முப்பெரும் விழா மாநாடு நேற்று நடைபெற்றது.

கட்சி பெயர், சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்த போதும், மாநாட்டில் அதிமுக கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அதிமுக தலைமைக் கழகம் போன்றே மேடை வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு செங்கோல் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பேசிய பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். ஓ.பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் பகுதியிலிருந்த தொண்டர்கள் அவரை நோக்கி முண்டியடித்துக் கொண்டு மேடைக்கு அருகே சென்றனர். அப்போது அவர்களில் ஒருவரிடம் கத்தி இருந்தது. இதை கவனித்து அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அந்த நபரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.உடனடியாக அவரை பொன்மலை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று காவல்துறையினர் விசாரித்தனர். அதில் அவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள சீனிவாசபேரியைச் சேர்ந்த கருத்தபாண்டி (57) என்பதும், இவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் தான் ஓபிஎஸ்ஸின் தீவிர தொண்டர் எனவும், ஓபிஎஸ் அணியில் விவசாய பிரிவு தலைவர் பொறுப்பில் இருப்பதாகவும், தனது தற்காப்புக்காகவே கத்தியை வைத்திருந்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *