”எனக்குப் பதவி, அதிகாரத்துக்கான ஆசையில்லை; நாட்டின் நலனுக்காக பாடுபடுகிறேன்” – நிதிஷ் குமார்

-இராகவேந்திரன்

“எனக்குப் பதவி மற்றும் அதிகாரத்துக்கான ஆசையில்லை. என் பணி தேசத்தின் நலனுக்காக செயல்படுவது. எனக்கென்று எதுவும் வேண்டாம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அதன்பின்னர் எல்லோரும் சேர்ந்து பிரதமர் வேட்பாளர் பற்றி கூட்டாக பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக.,வை தோற்கடிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவரும் பிஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாவை நிதிஷ் குமார் கொல்கத்தாவில் நேற்று சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து லக்னோவில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ் குமார், “எனக்குப் பதவி மற்றும் அதிகாரத்துக்கான ஆசையில்லை. என் பணி தேசத்தின் நலனுக்காக செயல்படுவது. எனக்கென்று எதுவும் வேண்டாம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அதன்பின்னர் எல்லோரும் சேர்ந்து பிரதமர் வேட்பாளர் பற்றி கூட்டாக பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “பாஜக தொடர்ச்சியாக நாட்டின் ஜனநாயக மதிப்புகளுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கிறது. நாங்கள் இங்கே நாட்டைக் காப்பாற்ற ஒன்றாக இணைந்துள்ளோம். பெருகும் வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம், வறுமை ஆகியனவற்றிலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்றுவது அவசியம். பாஜக நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறது. அவர்கள் முதலில் உண்மையான வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தேசத்திறாக பணியாற்றவில்லை தங்களைப் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். வரும் தேர்தலுக்காக பெரும்பாலான எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான போட்டியை முன்னெடுக்கப் போகிறோம்” என்றார்.

பாஜகவை ஜீரோவாக்க வேண்டும்.. முன்னதாக நேற்று நிதிஷ் குமாருடனான சந்திப்புக்குப் பின்னர் பேசியமம்தா பானர்ஜி, “பாஜகவை எதிர்க்கும் மெகா கூட்டணிக்கான கட்சிகள் ஒருங்கிணைப்பில் எனக்கு எவ்வித ஈகோவும் இல்லை.வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மக்களுக்கும் பாஜகவுக்கும் எதிரானதாக மட்டுமே இருக்கப் போகிறது. நான் ஏற்கெனவே சொல்லியதுபோல் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் தேர்தல் போருக்காக ஒன்றிணைவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.

நிதிஷ் குமாரிடம் நான் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளேன். ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கம் பிஹாரில் இருந்துதான் ஆரம்பித்தது. அதனால் நாம் பிஹாரில் ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பற்றி அங்கே முடிவு செய்ய வேண்டும். அதற்கும் முன்னதாக நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்ற செய்தியை வலிமையாகக் கடத்த வேண்டும். எனக்கு பாஜகவை ஜீரோவாக்க வேண்டும். அவர்கள் இப்போது ஊடக துணையோடு பெரிய ஹீரோவாக உலாவருகிறார்கள்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *