ஸ்டாலின் ரூட்டை பிடித்த காங்கிரஸ்!பதறும் பாஜக..

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

தமிழ்நாட்டில் திமுகவிற்கு தேர்தல் சமயத்தில் உதவிய திட்டம் ஒன்றை காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் கையில் எடுத்துள்ளது.தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது.ஆனால் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மக்கள் இடையே எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் திமுகவிற்கு உதவிய இந்த வாக்குறுதியை தற்போது காங்கிரஸ் கர்நாடகாவில் கையில் எடுத்து உள்ளது. கர்நாடகா- 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.அங்கே வேட்பாளர்களை அறிவித்து உள்ள காங்கிரஸ் தேர்தல் பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையிகள் தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி போல் ஸ்டாலின் பாணியில் 4 முக்கியமான வாக்குறுதிகளை காங்கிரஸ் அங்கே வெளியிட்டு உள்ளது. அதன்படி 1. க்ருஹ ஜோதி திட்டம்: இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம். 2. க்ருஹ லக்ஷ்மி திட்டம்: இந்த திட்டம் மூலம் 2000/மாதம் ஒவ்வொரு பெண் குடும்பத் தலைவிக்கும் வழங்கப்படும். இது தமிழ்நாட்டில் ஹிட் அடித்த திட்டம். 3. யுவ நிதி: வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹3,000 & வேலையில்லாத டிப்ளமோ வைத்திருப்பவர்களுக்கு ₹1500/மாதம் வழங்கப்படும் திட்டம். 4. அன்ன பாக்யா: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக அளிக்கப்படும்.

திமுக பெண்கள் வாக்குகளை வெல்ல காரணமாக இருந்த இந்த திட்டத்தை அங்கே கர்நாடகாவில் காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. அதேபோல், க்ருஹ ஜோதி திட்டம்: இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கப்படும். இது பஞ்சாப்பில் ஆம் ஆத்மிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த திட்டம் ஆகும். இந்த இரண்டு திட்டத்தையும் காங்கிரஸ் கையில் எடுத்துள்ளதால் பாஜகவிற்கு பிரஷர் அதிகரித்துள்ளது. முன்னதாக இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் ஆட்சியில் இருந்த பாஜக அரசை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. குடும்ப தலைவிக்கு நிதி கொடுக்கும் திட்டத்தை அங்கேயும் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது.பிரியங்கா காந்தி இதே திட்டத்தை Har Ghar Laxmi Campaign என்ற பெயரில் 1500 ரூபாயை எல்லா மாதமும் பெண்களுக்கு வழங்குவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். இந்த வாக்குறுதி பெண்களின் வாக்குகளை கவர மிக முக்கியமான காரணமாக அமைந்தது. அங்கே தேர்தலில் காங்கிரசும் வென்றது. தற்போது கர்நாடகாவிலும் இதே வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *