மழையில் நனைந்த பிரதமர் மோடி!கலங்கிய முதியவர்..

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

பெங்களூர் அருகே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நிகழ்ச்சி மழையால் நேற்று ரத்தானது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டு இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் கட்அவுட் மழையில் நனைந்த நிலையில் அதனை பார்த்து கலங்கிய முதியவர் தனது துண்டால் தண்ணீரை துடைத்து அன்பை வெளிப்படுத்தியது நெகிழ வைத்தது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வேகமாக பரவி வருகிறது.கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றது. நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. 3000க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இந்த வேட்புமனுக்களை வாபஸ் பெற 24ம் தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடத்தி மே மாதம் 13ல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. அதேபோல் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இதற்காக காங்கிரஸ், பாஜக சார்பில் 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாஜகவை பொறுத்தமட்டில் பிரதமர் நரேந்திர மோடி வரும் நாட்களில் 20க்கும் அதிகமான பொதுக்கூட்டங்களில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பிற பாஜக தலைவர்களும் மாநிலத்தில் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் தான் நேற்று பெங்களூர் அருகே தேவனஹள்ளியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக கனமழை பெய்தது. இதனால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதோடு, இன்னொரு தேதியில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.முன்னதாக இந்த நிகழ்ச்சிக்காக பாஜகவின் கொடிகள், தலைவர்களின் கட்அவுட்டுகள் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று மழை பெய்ததால் தலைவர்களின் கட்அவுட்டுகள் நனைந்தன. அப்போது பிரதமர் மோடியின் ஆளுயர கட்அவுட்டும் மழையில் நனைந்து இருந்தது. இதை பார்த்த முதியவர் பிரதமர் மோடியின் கட்அவுட்டில் இருந்த மழைநீரை துடைத்தார்.அதாவது மழையில் நனையாமல் இருக்க முதியவர் ஒருவர் தனது தலையில் துண்டு அணிந்திருந்தார். இந்த நபர் தான் தனது தலையில் இருந்த துண்டை எடுத்து சாலையில் வரிசையாக மழைநீரில் நனைந்து இருந்த பிரதமர் மோடியின் கட்அவுட்டுகளை துடைத்தார். கண்கள் கலங்கிய நிலையில் கட்அவுட்டை துடைத்துவிட்டு துண்டில் இருந்த தண்ணீரை பிழிந்தபடி முதியவர் சென்றார். இதை பார்த்த சிலர் அந்த நபரை அழைத்து பணம் கொடுத்தார்களா? என கேட்டனர். அதற்கு அவர் ‛‛நான் எனது விஸ்வாசத்தை காட்டுகிறேன். பிரதமர் மோடி எனக்கு கடவுள் மாதிரி. இதற்காக எனக்கு யாரும் பணம் தர வேண்டியது இல்லை” என கூறிவிட்டு மீண்டும் பிரதமர் மோடியின் கட்அவுட்டில் படிந்திருந்த மழைநீரை அவர் துடைத்தபடி சென்றார்.

இந்நிலையில் தான் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பாஜக தலைவர்கள் தங்களின் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரதமர் மோடி மீது மக்கள் வைத்திருக்கும் அன்பை பாருங்கள் என தெரிவித்து வருகின்றனர். பல்வேறு தலைவர்கள் இந்த வீடியோவை தற்போது பகிர்ந்து வருகின்றனர். இதனால் வீடியோ ட்விட்டரில் டிரெண்டாகி உள்ளது. இந்த வீடியோவை கர்நாடகா பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்த்தார். இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛பிரதமர் நரேந்திர மோடி மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர் மீதான தன்னலமற்ற பாசத்தை பாஜக சம்பாதித்துள்ளது. அதற்கான ஆதராம் தான் இது. கர்நாடகாவின் தேவனஹள்ளியில் எடுக்கப்பட்ட இந்த அழகான வீடியோவை பாருங்கள்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *