ஒற்றை வோட்டால் வீழ்த்தப்பட்ட பாஜக ஆட்சி… வரலாற்றில் மறக்க முடியாத நாள் இன்று… இது போன்ற ஒரு துணிச்சலை இனி பாப்போமா?

வெங்கட்ராம்.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு கவிழ்ந்த தினம் இன்று..!!

கடந்த 1998ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக, திரிணமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட 19 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வாஜ்பாய் தலைமையில் பாஜக போட்டியிட்டது. அந்த தேர்தலில் 182 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 261 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைதத்தது.

ஆனால் பெரும்பான்மை பலம் பெற 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் உருவானது. இதனை அடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் 12 எம்.பிகளின் ஆதரவுடன் பாஜக மத்தியில் ஆட்சியமைத்தது. வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றார்.

அதிமுகவின் தம்பித்துரை சட்டத்துறை அமைச்சராகவும், கடம்பூர் ஜனார்த்தனன் நிதித் துறை இணையமைச்சராகவும் மத்திய பாஜக அரசில் அங்கம் வகித்தனர். அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக அரசை அரசியல் சட்ட பிரிவு 356ஐ பயன்படுத்தி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வாஜ்பாய் அரசுக்கு ஜெயலலிதா தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார்.

ஆனால் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விளைவாக, மாநில அரசுகளை கலைக்கும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டிருந்தால் வாஜ்பாய் அரசினால் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்க முடியவில்லை. அதன் பிறகு 1999 ஏப்ரல் மாதம் டெல்லியில் சுப்ரமணிய சுவாமி அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா அங்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து வாஜ்பாய் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்த ஜெயலலிதா, அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். இதைத் தொடர்ந்து வாஜ்பாய் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 270 வாக்குகளும் பதிவாகின. இதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு கவிழ்ந்த (17/04/1999) தினம் இன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *