“2024 மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகளுடன் நிற்போம்” – தேவகவுடா 

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் பக்கம் நிற்கப்போவதாக முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய தேவகவுடா, “வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நான் இடதுசாரி கட்சிகள் பக்கம் நிற்கப்போகிறேன்” என்று தெரிவித்தார். கர்நாடகா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, ஹாசன் தொகுதியில் தேவகவுடாவின் மருமகள் பவானி ரேவண்ணாவுக்கு பதிலாக ஹெச்பி ஸ்வரூப் நிறுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்தும்படி பிதரமருக்கு தான் கடிதம் எழுதியுள்ளதாக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா சனிக்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சமீபத்தில் பிரதமர் மோடிக்கு நான் எழுதிய கடிதத்தில், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் அறிமுகம் செய்யவதை பரிசீலிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளேன். விரைவில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நாம் போகும்போது அதுவே முதல் சிறந்த விஷயமாக இருக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் அக்கடிதத்தையும் இணைத்துள்ளார்.

அவர் தனது கடிதத்தில், “இந்திய தேர்தல் ஆணையம், சமீபத்தில் கர்நாடகா சட்டப்பேரவைக்கான தேர்தலை அறிவித்தபோது வாக்களிக்கத் தகுதியான பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையையும் அறிவித்தது. மொத்த வாக்காளர்களில் அவர்கள் 50 சதவீதம் இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இந்த புள்ளி விபரங்களில் பெரிய மாற்றம் இருக்காது. இது சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை திரும்ப அறிமுகம் செய்வது குறித்த யோசிக்க வைக்கிறது.

எனவே, வரும் 2024-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாக பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று நான் உங்களை வலியுறுத்துகிறேன். கடந்த 1996 மற்றும் 2008ம் ஆண்டு மசோதாக்களில் தேவையான திருத்தங்களை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். பாலின சமத்துவத்துக்கான இந்த நகர்வு, சமூக நீதிக் கொள்கைக்கான முக்கிய வெற்றியாக இருக்கும்.

சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு என்ற இந்த சிந்தனை இந்தக் காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். புதிய மற்றும் நவீனமான நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு நாம் மாறும்போது, பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்தி நிறைவேற்றுவது ஒரு சிறந்த நினைவாக இருக்கும். நமது தாய்மார்களும் சகோதரிகளும் இதைப் பெறுவதற்கு தகுதியானவர்களே” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *