சட்டசபையில் 4 பெரிய டிவி!ரொம்ப அருமையான வேலை என பாராட்டு!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

தமிழக சட்டசபையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று 4 பெரிய தொலைக்காட்சிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த தொலைக்காட்சிகளில் எந்த உறுப்பினர் கேள்வி கேட்கிறாரோ அந்த உறுப்பினரின் புகைப்படம், கேள்வி, பொருள், துறை என பல்வேறு தகவல்கள் டிஸ்பிளே ஆகும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் அமைச்சர்கள் அளிக்கும் பதில்களும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்புள்ள மேஜையில் வைக்கப்பட்டுள்ள டேப்பில் வரும்படி புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.காலத்திற்கேற்ப நவீன டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி பணிச்சுமையை குறைக்க தமிழக சட்டசபை செயலகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே 58ஆம் கால்வாய் திட்டம் குறித்து பேச எழுந்த திண்டுக்கல் சீனிவாசன், தாம் கேட்க வந்த கேள்வியை விடுத்து டிவியில் டிஸ்பிளே ஆன தனது புகைப்படத்தை பார்த்து மெய் மறந்து நின்றார்.பிறகு சுதாரித்துக் கொண்ட அவர், சமாளித்த விதமாக, சபாநாயகர் ரொம்ப அருமையான வேலை செய்திருக்கிறார், இப்பத்தான் அறிவித்தார் அதற்குள் என் படமும் வருகிறது என பாராட்டினார்.உங்கள் படம் மட்டுமல்ல எல்லோருடைய படமும் அந்த டிவிக்களில் வரும் என்றும் என்ன கேள்வி கேட்டீர்கள் என்ற விவரம் வரும் எனவும் கூறிய சபாநாயகர் அப்பாவு கேள்விக்கு வருமாறு கூறினார். இதனிடையே திண்டுக்கல் சீனிவாசன் பேசிக் கொண்டிருந்த போது அடிக்கடி சின்னப்பிள்ளையை போல் தனது புகைப்படத்தை டிவி டிஸ்பிளேவில் பார்த்து மகிழ்ந்ததால், பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அவரை கலாய்க்கும் விதமாக சிரித்துக் கொண்டிருந்தார். திண்டுக்கல் சீனிவாசன் கேள்விக்கு பதிலளிக்க எழுந்த அமைச்சர் துரைமுருகனும், திண்டுக்கல் சீனிவாசனுக்கு கேள்வி கேட்பதில் இருந்த ஆர்வத்தை விட அவர் படத்தை டிவியில் பார்ப்பதில் அதிகம் ஆர்வம் இருந்ததை காண முடிந்ததாக தனது பங்குக்கு கலாய்த்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *