அதிரடியில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. சட்டசபையில் ஆளுநர் ரவிக்கு எதிராக தனித்தீர்மானம் தாக்கல்!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சட்டசபையில் இன்று காலை தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின். சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்புடையதாக இல்லை, என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டு உள்ளார்.தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி – முதல்வர் ஸ்டாலின் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது.ஆளுநர் ஆர். என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக முன்பே குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் பேசிய உரைக்கு எதிராகவும் தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக எம்பிக்கள் குடியரசுத் தலைவர் முர்முவிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதோடு சட்டசபையிலேயே அவரின் உரைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி, அரசின் உரை அவை குறிப்பில் சேர்க்கப்பட்டது. இன்னொரு பக்கம் ஆளுநரின் செயல்பாடுகள் மீது ஆளும் திமுக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவி 20 மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு உள்ளார். முக்கியமாக பல்கலைக்கழகங்களில் முதல்வரை வேந்தராக நியமிக்கும் மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளார். சில மசோதாக்கள் 1 வருடமாக கிடப்பில் இருக்கின்றன. இதனால் ஆளுநருக்கும் – ஆளும் தரப்பிற்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.இதுபோக மத ரீதியாக ஆளுநர் ரவி தொடர்ந்து பேசி வருகிறார். மத ரீதியாக கடுமையான கருத்துக்களை அவர் பேசி வருகிறார். ஆளுநர் என்பவர் நடுநிலையாக செயல்பட வேண்டும். அரசியலமைப்பு ரீதியாக அதை பின்பற்றி செயல்பட வேண்டும். அப்படி இருக்கும் போது அவர் சானதானம் பற்றி பேச கூடாது. அதேபோல் இந்தியா இந்து நாடு என்று பேச கூடாது. மதம் பற்றி அவர் கருத்து தெரிவிக்கவே கூடாது. பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளர் போல அவர் செயல்பட கூடாது என்பதுதான் திமுகவினர் ஆளுநருக்கு எதிராக வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.

இந்த நிலையில் சமீபத்தில் குடிமைப்பணி பயிற்சி பெற்றவர்கள் முன்னிலையில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். கிடப்பில் கிடந்தால் அந்த சட்டம் இறந்துவிட்டதாகவே பொருள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் தாக்கல் செய்துள்ளார் . சட்டசபையில் இன்று காலை தனித்தீர்மானம் கொண்டு வந்தார்முதல்வர் ஸ்டாலின். சட்டசபை மாண்புகளை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார் . சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

முக்கியமாக ஆளுநர் ஆர். என் ரவியின் செயல்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று தனி தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்னதாக ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானத்தை கொண்டுவந்தார் அவை முன்னவர் துரைமுருகன்.அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்தின் மீது வாக்கெடுப்புக்காக பேரவை கதவுகள் அடைக்கப்பட்டன. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ய சபாநாயகர் அப்பாவுவிடம் பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை,முன்னதாக ஆளுநர் ஆர். என் ரவியை எதிர்த்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஆளுநர் ஆர்.என். ரவி, தற்போது சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தனது பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனையில் உருவான சட்டங்கள், அவசரச் சட்டங்கள் சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு உடனடி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி, தனது நிர்வாகவியல் கடமைகளில் இருந்து தவறியும், தனது கடமைகளில் இருந்து தப்பித்தும், நழுவியும் வருவதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வழக்கமாக வைத்துள்ளார்கள். அதற்கு முறையான காரணத்தையும் அரசுக்குத் தெரிவிப்பதும் இல்லை. இப்படி 14 கோப்புகள் அவரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. முடக்குவாத செயல்: இவை ஆளுநரின் கடமை தவறுதல் மட்டுமல்ல, செயல்படாத முடக்குவாதச் செயலாகவே அமைந்துள்ளது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், ஏதாவது ஒப்புக்கு ஒரு கேள்வியைக் கேட்டு அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு தனது கடமை முடிந்ததாக இருக்கிறார் ஆளுநர். உதாரணமாக எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் என்பது மிகமிக அவசர, அவசிய நோக்கத்தோடு இயற்றப்பட்டது ஆகும்.முதலில் ஏதோ உப்புச்சப்பற்ற கேள்வியைக் கேட்டார். பின்னர். இந்த சட்டம் இயற்றும் உரிமையே மாநில அரசுக்கு இல்லை என்றார். ‘மாநில அரசுக்கே உரிமை உண்டு’ என்று ஒன்றிய அமைச்சர்களே சொன்னபிறகும் இங்கிருக்கும் ஆளுநர் அதனை ஏற்கவில்லை. ஏனெனில் ஏற்க மனமில்லை. இத்தனை உயிர்கள் பலியான பிறகும் கரையாததாக ஆளுநரின் மனம் இருப்பது அதிர்ச்சியையே தருகிறது.

சட்டம் அறிந்தவர் போல் கருத்துக்களைத் தெரிவித்து வரும் ஆளுநருக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி பண மசோதாவைத் திரும்ப அனுப்பிட அதிகாரம் கிடையாது. ஆனால், கடந்தாண்டு அக்.17ஆம் தேதி அன்று ஆளுநராலேயே பரிந்துரைக்கப்பட்டு, சட்டமன்றத்தால் ஏற்பளிக்கப்பட்டு சட்டப்பேரவைத் தலைவரால் பண மசோதா என்று கடந்தாண்டு அக். 10 அன்று சான்றளிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி மசோதாவை அவர் கடந்த மார்ச் 6ஆம் தேதி அன்று திரும்ப அனுப்பியது அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது என்பதை அவர் தெரிந்தும் செய்துள்ளாரா என்பதை பொது மக்களின் கருத்துக்கே விட்டு விடுகிறேன். பதவிக்கு அழகல்ல: இந்த நிலையில் இன்றைய தினம் ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து, அவர் வகிக்கும் பதவிக்கு அழகும் அல்ல. அவர் அப்படிப் பேசிய இடம் முறையான இடமும் அல்ல. ‘கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்துக்காக அதனை நிறுத்தி வைப்பு என்கிறோம்’ என்று பேசி இருக்கிறார் ஆளுநர். மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர்கள் மத்தியில் இப்படி பேசி இருக்கிறார். ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், நிர்வாக ரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் இப்படி அலட்சியமாகக் கருத்துகளை வெளிப்படுத்துவது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல் ஆகும். “Shamsher Singh v. State of Punjab” (1975) என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மாநில அரசின் சுருக்கெழுத்து தான் ஆளுநர் என்று சுருக்கமாகச் சொன்னார்கள். அதனை மறந்துவிட்டு, ‘தி கிரேட் டிக்டேட்டராக’ தன்னை ஆளுநர் நினைத்துக் கொள்ள வேண்டாம். அரசியலமைப்புச் சட்டத்தின்படி பண மசோதா தவிர பிற வகை மசோதாக்களை ஆளுநர், அரசுக்குத் திருப்பி அனுப்பலாம். சட்டமன்றம், மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், அதனை ஆளுநரால் நிராகரிக்க முடியாது. கருத்தை திரும்பப்பெற வேண்டும்:

எனவே ஆளுநர் அவர்கள் கேட்ட விளக்கங்களைக் கொடுத்து மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த பிறகும் ஒப்புதல்கள் வழங்காமல் இருப்பது சட்டமுறையும் ஆகாது. சட்டம் அறிந்தவர் முறையும் ஆகாது. இதனை நமது மாநிலத்தின் நிர்வாகத்தினை முடக்கும் செயலாகவே எண்ண வேண்டியுள்ளது. எதையும் துணிச்சலாக ஏற்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் கிடப்பில் போடுவது என்பது அரசியல் சட்டம் அங்கீகரித்த பதவியில் இருப்பவருக்கு அழகல்ல. அதையும் தாண்டி., அதனை சட்டபூர்வமற்ற பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதோடு நியாயப்படுத்திட முயல்வது என்பது மிகமிக மோசமான முன்னுதாரணம் ஆகும். தான் சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே ஆளுநர் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு உண்மையாக நடந்து கொள்வது ஆகும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பினைக் குறைக்கும் வகையில் ஆளுநர் பேசி வருவது அவருக்கும் அழகல்ல, அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. இதனை உணர்ந்து அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நிறைவேற்றிடும் வகையில் அவர் செயல்படுவார் என நான் நம்புகிறேன்.” என தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *