“இவங்களுக்கு” மாதாந்திர உதவித்தொகையை அதிகப்படுத்துங்க- திமுக அரசுக்கு கோரிக்கை

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவருவதால், அதற்கான எதிர்பார்ப்புகள் எகிறிவருகின்றன. மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்ற தனித் துறை கடந்த 2010ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.இந்த துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.. ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் உயர்த்தப்படாமலேயே இருந்தது.

இதனால் மாதாந்திர உதவித்தொகையை 40 சதவீதம் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1,000லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், கடும் ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.1,500 லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தியபடியே இருந்தன.. அதாவது, 40 சதவீதம் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் பராமரிப்பு தொகையானது, தெலுங்கானாவில் ரூ.3,016, ஆந்திராவில் ரூ.3000, புதுச்சேரியில் அதிகபட்சமாக ரூ.3,800 வழங்கப்படுகிறது.இதே போன்று, தமிழகத்திலும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், கடந்த வருடம் இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.. கடுமையான இயலாமை; கடுமையான அறிவுசார் குறைபாடு; தசைச்சிதைவுகள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்புத் தொகையாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ரூ.1,500/- இனி ரூ.2,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்..

மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் சூட்டிய கலைஞரின் வழியிலே மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் முதல்வர் கூறியிருந்தார்.. அதன்படியே, மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை ரூ1,500 யிலிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டு அரசாரணையும் வெளியிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை உயர்த்த முதற்கட்டமாக ரூ.31.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது..

அதேபோல, மனவளர்ச்சி குன்றியவர்கள், முதுகு தண்டுவடம், தசை சிதைவு நோய் பாதித்தவர்களுக்கு உதவிதொகை உயர்த்தப்பட்டது.. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசு, முக்கிய கோரிக்கையை திமுக அரசுக்கு விடுத்துள்ளார்.. திருப்போரூர் அடுத்த தண்டலத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு நடந்தது.. இதில் முத்தரசன் பங்கேற்றார்.. அப்போது, மாற்றுத் திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாநாட்டில் பேசினார்..இறுதியில் செய்தியாளர்களிடம் முத்தரசன் பேசும்போது, “தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றிவருகிறது. அவர்களுக்கான மாதாந்திர உதவி தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய உதவிஉபகரணங்களுக்கு மத்திய அரசு வரி விதித்துள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை உள்ளதால், அவர்களுக்கான சாய்வுதளம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதம் ஒருமுறை மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பேசும்போது, “உலக வங்கியின் நிதியுதவியுடன் 1763 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரைட்ஸ் திட்டம் எனப்படும் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இந்த திட்டம் வரும் ஆண்டில் 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். உடல் குறைபாடு மதிப்பீடு சான்றிதழ், ஆரம்பக்கட்ட சிகிச்சை கோட்ட அளவிலேயே வழங்க 39 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்படும். வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கவும், பல உதவிகளைப் பெறவும் தன்னார்வ உறுப்பினர்களைக் கொண்ட 150 மையங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.. எனினும், மாதாந்திர உதவித்தொகையும் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதால், இதற்கான அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *