“யார் அப்பன் பணம்..” ஆளுநரை “மிக கடுமையாக” விமர்சித்த துரைமுருகன்!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

உங்களுக்கு ஒரு கட்சி கொள்கையிருந்தால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு போய் பாஜகவில் சேர்ந்து விடுங்கள் என்று சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் கோபத்தோடு பேசினார். ஆளுநர் மாளிகையில் ஒளிரபரப்பான சுதந்திர போராட்ட வீரர்கள் படத்தில், காந்தியும் இல்லை, நேருவும் இல்லை யார் வீட்டு அப்பன் பணத்தில் இதை காட்டுகிறீர்கள் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழக சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கொண்டு வந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ராஜ்பவனை அரசியல் பவனாக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றிவிட்டதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இந்த தீர்மானத்தை ஆதரித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பேசினர். சட்டசபையில் பேசிய துரைமுருகன் கோபம், ஆக்ரோசம், நகைச்சுவை என நவரசங்களையும் வெளிப்படுத்தினார். விசிக எம்எல்ஏ சிந்தனை செல்வன் பேசும் போது ஆளுநர் செயல்பாடுகள் சட்டசபையின் இறையான்மையை மட்டுமல்லாது, ஜனநாயகத்தின் மாண்பையும் மறுக்கும் செயல். ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று கூறினார்.

தொட்டிலையும் ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளிவிடும் செயலை மத்திய அரசு செய்கிறது. இனி ஒரு நிமிடம் கூட ஆளுநராக இருக்கும் தகுதி ஆர்.என்.ரவிக்கு இல்லை. தமிழக முதல்வர் அடுத்தகட்டமாக தமிழக ஆளுநரைத் திரும்பப் பெறும் தீர்மானத்தை அடுத்தகட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.ஆளுநர் தேவையில்லாமல் நிறைய பேசுகிறார். கூடங்குளம், ஸ்டெர்லைட் விவகாரங்கள் குறித்து ஆளுநர் பேச வேண்டிய அவசியம் என்ன? எந்த கோணத்தில் பார்த்தாலும் ஆளுநர் அவர் விருப்பப்படி செயல்படுகின்றாரே தவிர தமிழர் நலனில் அவருக்கு அக்கறை இல்லை. முதல்வர் கொண்டு வந்திருக்கும் இந்த தனித்தீர்மானத்தின் மூலம் ஆளுநர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு நடுவண் அரசும், குடியரசுத் தலைவரும் அவருக்கு அறிவுறுத்த வேண்டும். தந்தை பெரியார் இல்லை என்றால் நானும் அப்பாவும் டாக்டர் ஆகி இருக்க முடியாது; எங்க அப்பா ஏரோட்டிக் கொண்டிருப்பார் அவருக்கு உதவியாக நான் இருந்திருப்பேன் என்றும் பாமகவின் ஜி.கே.மணி கூறினார்.

சரியான நேரத்தில் முதல்வர் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளார். அதில் நாகரிகத்தோடு, நியாயத்தை எடுத்துக் கூறும்வகையில் காழ்ப்புணர்ச்சியின்றி வாக்கியங்கள் இருப்பது பாராட்டத்தக்கது. ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது தெரிந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துவிட்டனர். போகின்ற போக்கில் நீங்கள் சட்டமன்ற விதிகளைத் தளர்த்தவெல்லாம் செய்கின்றீர்களே என்றார்கள். இதைக் கற்றுக்கொடுத்ததே அவர்கள் தான். விதிகளைத் தளர்த்தித்தான் சென்னா ரெட்டியின் மீது பாய்ந்தார்கள். அதே விதியை தளர்த்தும்போது பத்தினி ஆகிவிட்டார்கள். சென்னா ரெட்டியை அதிமுகவினர் கல் விட்டு அடித்தது போல நாங்கள் செய்ய மாட்டோம்; கலைஞர், அண்ணாவால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள் என்றார்.

திமுக தோன்றிய போது ஆளுநர் தேவையில்லை என்று சொன்னோம். மேற்கு வங்க அரசுக்கு குடைச்சல் கொடுத்த ஆளுநரை மாநிலங்களவை தலைவராக்கியுள்ளனர். தமிழ்நாட்டில் ஆளுநர் உரையை வாசிக்கும் போதே சில வார்த்தைகளை விட்டு விட்டு படித்தார் ஆளுநர். சில வார்த்தைகளை சேர்த்தும் படித்தார் ஆளுநர். ரயில் தடம் புரள்கிறது எங்கேயோ வண்டி மாட்டப்போகிறது என்று அப்போதே சொன்னேன். உடனே முதல்வர் ஸ்டாலின் அடித்தார். அகில இந்திய செய்தியானது.தமிழ்நாடு சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறினார் என ஆங்கில நாளிதழ் தலையங்கம் எழுதியது. ஆளுநர் அரசியல் பேசுவதாக கூறிவிட்டு அட்வைஸ் செய்தனர். இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. பஞ்சாயத்து செய்யாமல் இருக்க வேண்டும். மாநிலத்தின் நிலைமை தெரியாமல் கூறுகெட்ட தனமாக பேசினால் இதுதான் வரும் என்று இந்து எழுதியது. ஆளுநர் அப்போதும் திருந்தவில்லை

சட்டசபையில் மசோதா தாக்கல் செய்தால் அதை ஆளுநர் கையெழுத்து போட வேண்டும். சந்தேகம் இருந்தால் குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் சாகும்வரை ஆளுநர் வைத்துக்கொள்ளலாம். சகட்டுமேனிக்கு வைத்துக்கொண்டால் என்ன செய்வது. சந்தேகம் இருந்தால் எங்களிடம் கேட்கலாம். மாநில அரசும் சந்தேகத்தை நிவர்த்தி செய்து திருப்பி அனுப்பினால் அதை எதுவும் செய்ய முடியாது.ஆளுநர் மாளிகையில் ஒளிபரபரப்பான சுதந்திர போராட்ட வீரர்கள் படத்தில், காந்தியும் இல்லை, நேருவும் இல்லை காந்தி இல்லாமல் சுதந்திர போராட்டமா?, யார் வீட்டு அப்பன் பணத்தில் இதை காட்டுகிறீர்கள். உங்களுக்கு ஒரு கட்சியும் கொள்கையும் இருந்தால் பதவியை ராஜினாமா செய்து விட்டு போய் அந்த கட்சியில் சேர்ந்து விடுங்கள் என்று டென்சனாக பேசினார் துரைமுருகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *