மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகிறது ‘கலைஞர் நூலகம்’ – ஜூன் 3-ல் திறப்பதாக தகவல்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

மதுரை நத்தம் சாலையில் ரூ.114 கோடியில் மிகப் பிரமாண்டமாக எழுப்பப் பட்டிருக்கும் கலைஞர் நூலகத்தை, அவ்வழியே செல்லும் மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

இந்த நூலகம் மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக மாறினாலும் ஆச்சரியமில்லை. சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் மட்டுமே ஆசியாவிலேயே பிரம்மாண்ட நூலகம் ஆகும். தற்போது அதைக் காட்டிலும் பிரம்மாண்டமாக ரூ.114 கோடியில் மதுரை – புது நத்தம் சாலையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டுள்ளது.

இதில் கட்டிடம் மட்டுமே ரூ.99 கோடியில் கட்டப்படுகிறது. ரூ.10 கோடியில் பல்வேறு தலைப்புகளில் நூலகத்துக்குத் தேவையான புத்தகங்கள் வாங்கப்படுகின்றன. மேலும் ரூ. 5 கோடியில் கணினி தொழில்நுட்ப உபகரணங்களுடன் அதி நவீனமாக்கப்பட்டுள்ளது.

மதுரையில் அமையும் கலைஞர் நூலகம் கீழ்தளம், தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட கட்டிடமாக மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்த நூலகம் கட்டுமானப்பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து, அடிக்கடி வந்து கண்காணித்து வந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினும் சில மாதங்களுக்கு முன்பு ஒருமுறை நேரில் வந்து ஆய்வு செய்தார்.

அதனால், நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு 6 மாதங்களுக்கு முன்பே நூலக கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. அதன்பின், உள் அலங்காரம் கட்டமைப்பு பணிகள் (இன்டீரியர் டெகரேஷன்) நடந்தன. கட்டிடத்தின் நடுப்பகுதியில் சூரிய வெளிச்சம் கிடைக்கும் வகையில், கண்ணாடிப் பேழையிலான கூடாரம் நூலகத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது 99 சதவீத பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ளது. இந்த நூலகம் அமைந்துள்ள நத்தம் சாலையையும், அதன்மேல் தமிழகத்தின் மிக நீளமான பறக்கும் பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையையும், பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்தச் சாலையில் செல்வோர் பிரம்மாண்ட கட்டிடத்தை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

எதிர்காலத்தில் மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக மாறப்போகும் கலைஞர் நூலகத்தை, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி திறந்து வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருவதாக அரசு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *