குடும்ப அரசியல் காரணமாக தெலங்கானாவில் முறைகேடு அதிகரித்துவிட்டது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

 தெலங்கானா மாநிலத்தில் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று ஹைதராபாத் வந்தார்.

செகந்திராபாத்தில் புதுப்பிக்கப் பட்ட ரயில் நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் செகந்திராபாத்தில் இருந்து திருப்பதி செல்லும் புதிய வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் போலீஸ் பயிற்சி மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மத்திய பட்ஜெட்டில் அடிப்படை வசதிக்காக ரூ. 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் தெலங்கானாவில் ரூ.35ஆயிரம் கோடியில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஜவுளிப் பூங்காவும் தெலங்கானாவில் அமைக்கபட்டுள்ளது.

இதன் மூலம் விவசாயிகள், தொழிலாளர்கள் மிகவும் பயன் அடைவர். ஹைதராபாத் – பெங்களூரு இடையே தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி இரு நகரங்களையும் இணைக்கும் பணியை போர்க்காலஅடிப்படையில் செய்து வருகிறோம். ஆனால், தெலங்கானாவில் மத்திய அரசின் நல திட்டப்பணிகளை அமல்படுத்த மாநில அரசுபோதிய ஒத்துழைப்பு தருவதில்லை. தெலங்கானாவில் குடும்ப அரசியலால் முறைகேடுகள் அதிகரித்து விட்டன.

அப்பா, மகன், மகள் என அனை வரும் அரசியலில் ஈடுபட்டதால் முறைகேடுகள் தெலங்கானாவில் அத்துமீறி விட்டன. ஊழல் பேர்வழிகளை நாம் ஒழித்து கட்ட வேண்டுமா? வேண்டாமா? முறைகேடு செய்பவர்கள், ஊழலில் ஈடுபடுவோரை சட்டம் தண்டிக்கிறது. குடும்ப அரசியலில் இருந்து மக்களை நாம் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *