ரூ.1,260 கோடியில் சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
-ஊடகவியலாளர் இராகவேந்திரன்
ரூ.1,260 கோடியில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர், சாலை வழியாக சென்னை சர்வதேச சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். இதன்பிறகு, ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம், விமான நிலையத்தின் பயணிகள் சேவைத் திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயர்த்தும் என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முனையம், கோலம், சேலை, கோயில்கள் போன்ற பாரம்பரிய அம்சங்களைக் கொண்ட தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும், இயற்கையான சுற்றுப்புறத்தைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 3.25 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வரும் பிரதமர், அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையம் சென்று, மாலை 4 மணிக்கு சென்னை – கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னையில் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.