ஸ்டெர்லைட் பற்றிய பேச்சு..ஆளுநர் ரவிக்கு வலுக்கும் கண்டனங்கள்!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான ஆளுநர் ரவியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ரவியின் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவு ,’தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வெளிநாட்டு அமைப்பினர் ஏராளமாகப் பணத்தைக் கொடுத்து உள்ளூர் மக்களைப் போராட்டத்திற்குத் தூண்டி அதன் மூலம் அந்த ஆலை மூடப்பட்டதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது கண்டனத்திற்குரியது.

எந்தவித ஆதாரமும் இல்லாமல் மாநிலத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆளுநர் அவர்கள் இதுபோன்ற கருத்தைத் தெரிவித்திருப்பது ஆணவத்தின் வெளிப்பாடாகும்.
நாசகர ஸ்டெர்லைட் ஆலைக்குஎதிராக தன்னெழுச்சியாக போராடிய மக்கள் மற்றும் அதற்கு எதிராக தன்னுடைய உயிரைத் தியாகம் செய்தவர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக ஆளுநர் ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழக மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.ஆளுநர் ரவி அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறுவது தொடர் கதையாக உள்ளது. அண்மையில் கூட ராஜபாளையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரிஷிகளாலும், வேதங்களாலும் உருவானது தான் இந்தியா எனக் கூறியிருந்தார்.
அதற்கு முன்னர் திருக்குறளுக்கும் ஆன்மிகத்துக்கும் உள்ள தொடர்பு பற்றியும், சனாதனம் பற்றியும் பேசி சர்ச்சையில் சிக்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *