‘சென்னை கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை’- முதல்வர் ஸ்டாலின்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

சென்னை கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 31) உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக சட்டப்பேரவையில் பல்வேறு உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தைப் பொறுத்த வரையில், தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியது. இது குறித்து கலாஷேத்ரா இயக்குநர் டிஜிபியை சந்தித்து பாலியல் புகார் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

பின்பு தேசிய மகளிர் ஆணையமே, இந்த வழக்கை முடித்து வைத்துவிட்டோம் என்று தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்பின்னர் தேசிய மகளிர் ஆணைய தலைவர் நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது காவல் துறை தங்களுடன் வரத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காவல் துறைக்கு இதுவரை எழுத்துபூர்வ புகார் எதுவும் வரவில்லை. இந்த விவகாரத்தைப் பொறுத்த வரையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *