தங்கமணி சொன்ன வார்த்தை !குறுக்கே எடப்பாடி..சரமாரி அட்டாக்! டக்கென எழுந்த சேகர்பாபு..

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 27ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தின்போது அமைச்சர் சேகர்பாபு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்த பதிலடியால், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு எழுந்து பதில் சொன்ன நிலையில், எடப்பாடி பழனிசாமி சேகர்பாபுவை சீண்டும் வகையில் பேசினார்.இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்து ஆஃப் செய்தார் அமைச்சர் சேகர்பாபு. இதனால் சட்டப்பேரவையில் கூச்சல் நிலவியது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 27ஆம் தேதி பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் அறிக்கை மீதான மூன்றாவது நாள் விவாதம் நடந்தது.

இந்த விவாதத்தின்போது பேசத் தொடங்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைப் புகழ்ந்து தனது உரையைத் தொடங்கினார். அப்போது அவர், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை எனச் சொல்லியவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் எடப்பாடி பழனிசாமி என்றார்.அப்போது எழுந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ‘கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளே இல்லை எனச் சொன்னது இந்த ஆட்சியில் அல்ல. அது 2016ஆம் ஆண்டு சொல்லப்பட்டது. அப்போது சுறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த ஆண்டு 98 எம்.எல்.ஏக்களுடன் வலிமையான எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் அமர்ந்தவர் தற்போதைய முதல்வர் ஸ்டாலின்’ என்றார். அதற்கு தங்கமணி, நாங்கள் உங்களைச் சொல்லவில்லை. சொன்னவரைச் சொல்கிறோம். நீங்கள் ஏன் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல தேவையில்லாமல் பேசுகிறீர்கள்’ என்றார்

அதற்கு அமைச்சர் சேகர் பாபு, வேண்டுமென்றால் ஒரு மணி நேரம் அவகாசம் தாருங்கள்.. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த வார்த்தைகளைப் பேரவைக்குள் சொன்னதை நிரூபிக்கிறேன் என்றார். இதையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘சேகர்பாபுவும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் உருவானவர் தான்’ என்று குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமியின் இந்த உடனடி கவுன்ட்டர் பேச்சுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் மேசையைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ‘யார் யாரை உருவாக்கியது என்பது இங்கே வாதமல்ல. இந்த அவையில் யார் என்ன பேசியது என்பதே வாதம். யார் யாரை உருவாக்கினார்கள், யார் யாரால் உருவாக்கப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்’ எனக் கூறினார். அதற்குப் பதிலளித்த தங்கமணி, ‘உங்கள் தலைவர் எப்படி முதலமைச்சர் ஆனாரோ… அப்படித்தான் எங்கள் தலைவரும் முதலமைச்சரானார்’ என்றார்.

இதற்கு உடனடியாக ரிப்ளை கொடுத்த அமைச்சர் சேகர்பாபு, ‘கடந்த காலத்தில் ஏற்பட்ட சிறு குழப்பத்தால் முதல்வரானவர் உங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தேர்தலில் இவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எங்கள் முதல்வர். இது பற்றி மேலும் பேசினால், அவர் எப்படி முதல்வர் பதவிக்கு வந்தார் என்பதை விளக்கமாகச் சொல்ல நேரிடும்’ என்றார். இதையடுத்து, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த காரசார விவாதத்தால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *