எடப்பாடிக்கு முதல் வாழ்த்து! சொன்னது யார்னு பார்த்தீங்களா! “பூனைக்கு மணியா”…

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக உயர்ந்துள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் குஷியில் உள்ளனர்.. பல்வேறு தலைவர்களின் வாழ்த்து மழையில் எடப்பாடி பழனிசாமி நனைந்து வருகிறார்..!!திமுகவுடன் பாமக நெருங்கி வந்த நிலையில், ஒருவேளை திமுகவுடன் கூட்டணிக்கு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் நிலவி கொண்டே வந்தது.. ஆனால், நெய்வேலி விவகாரம் அப்படி ஒரு எதிர்பார்ப்பையே குலைத்துவிட்டது.என்எல்சி மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கடந்த 11-ம் தேதி, முழு அடைப்பு போராட்டத்தை பாமக அறிவித்திருந்தது. எப்படியாவது, இந்த முழு அடைப்பை வெற்றிகரமாக நடத்தி விட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியது.


ஆனால், 2 டிஐஜி-க்கள், 10 எஸ்பி-க்கள் தலைமையில் போலீஸ் படையை திமுக அரசு குவித்துவிட்டது.. இதனால் அந்த முழு அடைப்பு போராட்டமே பிசுபிசுத்து போய்விட்டதாக தெரிகிறது.. திமுக அரசை விமர்சிக்காமல், மென்மையான போக்கை கடைப்பிடித்தும்கூட, இப்படி செய்துவிட்டார்களே? என்ற வருத்தம் தைலாபுர தோட்டத்துக்கு இருக்கவே செய்கிறது என்கிறார்கள். அந்த வருத்தத்தில்தான், ‘மத்திய அரசை தொடர்ச்சியாக எதிர்த்து வரும் திமுக என்எல்சி விவகாரத்தில் மட்டும் மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்பது ஏன்?’ என்று அன்று கேள்வி எழுப்பினாராம் அன்புமணி.. அதுமட்டுமல்லாமல், சமீபத்தில், என்எல்சி நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான கருத்தரங்கம் நெய்வேலியில் நடந்தது..
இதில், அன்புமணி பேசும்போது, என்எல்சி விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக எதிர்த்திருந்தார்.. குறிப்பாக, ‘விவசாயத்துறை அமைச்சர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் வைத்து பேச வேண்டும்’ என்று அன்புமணி பேசியிருந்தது, ஆளும்கட்சிக்கு பெருத்த அதிர்ச்சியையும் உண்டாக்கி உள்ளதாம்..

பாமக வெளிப்படையாகவே விமர்சித்துள்ள நிலையில், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியை புதுப்பிக்க பாமக அச்சாரம் போடுகிறதோ? என்கிற வியூகங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.. இதனிடையே, கடந்த மாதம், அதிமுக பொதுக்குழு வழக்கில், எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தபோது, முதல்நபராக அன்புமணி ராமதாஸ் வாழ்த்து சொல்லியிருந்தார்..அதாவது, அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் அன்புமணியிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.. அதற்கு அவர், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் தேர்ந்தெடுத்தபோதே நாங்கள் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டோம். அந்த வாழ்த்துகள் இப்போதும் செல்லும் என்றார்.. எடப்பாடிக்கு அன்புமணியின் இந்த வாழ்த்தானது, பலரது புருவங்களையும் அப்போது உயர்த்திவிட்டு போனது.. அப்படியானால், அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதோ? என்ற சந்தேகம் வட்டமடிக்க துவங்கியது.

திமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்று அன்புமணி ராமதாஸ் சில நாட்களுக்கு முன்பு தெளிவுபடுத்தியிருந்ததும், இந்த சந்தேகத்தை வலுவாக்கிவிட்டு சென்றது.. இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக உயர்ந்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மறுபடியும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பொறுப்பில் அவரது பணி சிறக்க வாழ்த்துகள்’ என குறிப்பிட்டுள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு நடந்த பாமக கூட்டத்தில் அன்புமணி பேசும்போது, அதிமுக 4ஆக பிரிந்துவிட்டதாக விமர்சித்திருந்தார்…

இதனைத் தொடர்ந்து அதிமுக – பாமக இடையில் சில உரசல்கள் நேரிட்டது… அதிலும், ஜெயக்குமார் எக்கச்சக்கமாகவே பாமகவுக்கு பதிலடிகளை தந்து கொண்டிருந்தார்.. மேலும், இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்று அறிவித்ததுடன், யாருக்கும் ஆதரவும் இல்லை என்று தெளிவுபடுத்தியதால், இதன் மூலம் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியதாகவும் கருத்தில் கொள்ளப்பட்டது.அதுமட்டுமல்லாமல், பாமகவின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான பாலு செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘2021-ம் ஆண்டு நடந்த 9 மாவட்டங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என முடிவெடுத்திருந்தோம். அந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கிறது. அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இருப்பதாக சொல்வது அறியாமையால் ஏற்படும் சந்தேகம்’ என்றும் கூறியிருந்தார்.. ஆக, சமீபநாட்களில் பல்வேறு முரண்பாடுகள், சலசலப்புகள் நிலவிவந்த போதிலும், அவைகள் அனைத்துமே மெல்ல மெல்ல தவிடுபொடியாகி, அதிமுகவுடன் நெருங்கி வருகிறது பாமக என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *