“மக்களை தேடி மேயர்..” சென்னை பட்ஜெட்டில் மாஸான அறிவிப்பு!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல முக்கிய திட்டங்கள் இருந்தாலும் “மக்களைத் தேடி மேயர் திட்டம்” பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் பல ஆண்டு காலதாமதமாக நடத்தப்பட்டது அனைவருக்கும் தெரியும். இதனால் உள்ளாட்சி அமைப்புகளே செயல்பட முடியாமல் முடங்கியது.நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், பல ஆண்டு தாமதத்திற்குப் பின்னரே முதலில் ஊரக உள்ளாட்சித் தேர்தலும் அதன் பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் நடைபெற்றன. இப்போது தான் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படத் தொடங்கியுள்ளது.
உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லை என்பதால் மத்திய அரசின் பல கோடி தொகையும் கூட திருப்பி அனுப்பப்பட்டது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லை என்பதால் கடந்த 2016க்கு பிறகு சுமார் 5 ஆண்டுகள் நேரடியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமலேயே இருந்தது.

கடந்தாண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்டார்.
2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதில் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவாக்கம் உள்ளிட்ட 67 முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. இதனிடையே இன்று மீண்டும் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தில் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் இன்று கூடிய நிலையில், மேயர் பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் மக்களைத் தேடி மேயர் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள புகார்களை நேரடியாக மேயரிடம் தெரிவிக்கலாம். சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், மாதத்திற்கு ஒருமுறை ‘மக்களைத் தேடி மேயர் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களில், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாதம் ஒருமுறை வட்டார அலுவலகங்களில் இந்த மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ் மனுக்களை நேரடியாகப் பெறும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் வசிப்போர் தங்கள் பகுதிகளில் இருக்கும் குறைகளைக் குறிப்பிட்டு விரைவாகத் தீர்வுகளைப் பெற முடியும்.ஏற்கனவே தமிழக அரசு கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வருகிறார்.. கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்களுடன் மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று முதல்வர் நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.சென்னை பட்ஜெட்டில் வேறு பல முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் உள்ளன. தூய்மை பணியாளர்களுக்கு புதிய வடிவமைப்பில் சீருடை வழங்கப்படும், சென்னை முழுவதும் ஆறு நாய் பிடி வாகனங்கள் மற்றும் ஐந்து மாடு பிடி வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும், சென்னையில் நெகிழி தடை தீவிரமாகக் கண்காணிக்கப்படும். மக்களுக்கு மஞ்சப்பை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என பல முக்கிய அறிவிப்புகள் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *