அமித் ஷாவை சந்தித்த அண்ணாமலை பேட்டி! அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை..

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி மற்றும் கட்சிப் பணிகள் குறித்து டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேசியதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக வளர வேண்டும் என்று நினைப்பதாக கூறிய அவர், கூட்டணி தொடர்பாக பாஜக நாடாளுமன்ற மத்திய குழு தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளை செய்வேன் என்று தெரிவித்தார்.

அமித் ஷா - அண்ணாமலை சந்திப்பு

அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு

இதனால் தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி உடைகிறதா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே நேற்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

அண்ணாமலை விளக்கம்

அண்ணாமலை விளக்கம்

இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் ஆகியோரை சந்தித்தேன். நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தேன். பாஜகவை பொறுத்தவரை அகில இந்திய தலைமை முதல் கடைக்கோடி தொண்டன் வரை அனைவருக்குமே தமிழ்நாட்டில் வளர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது. மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம்.

டெல்லியில் பேசியது என்ன?

டெல்லியில் பேசியது என்ன?

தமிழ்நாட்டில் பாஜகவை எப்படி ஆளும் கட்சியாக கொண்டு வர வேண்டும் என்று செயல்படுகிறோம். தமிழ்நாட்டின் அரசியல் களம் குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதேபோல் பாஜகவில் எங்களின் பொறுப்பை நாங்கள் அனைவருமே உணர்ந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. பாஜக நாடாளுமன்றக் குழு அனைத்து விவகாரங்களையும் கவனித்து வருகிறார்கள். நாடாளுமன்றக் குழு தான் முடிவு செய்யும். அதேபோல் பாஜகவுக்கோ, எனக்கோ தனிப்பட்ட முறையில் எந்தக் கட்சி மீதும், தலைவர் மீதும் கோபமோ, ஆதங்கமோ கிடையாது.

பாஜகவை வளர்க்க நினைக்கிறோம்

பாஜகவை வளர்க்க நினைக்கிறோம்

அனைத்து கட்சியினரும் அவர்கள் வளர வேண்டும் என்றே நினைப்பார்கள். கூட்டணி இருந்தாலும், அதுதான் தர்மம். அதிமுக வளர வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை. அதேபோல் பாஜக வளர வேண்டும் என்று நினைப்பதிலும் தவறில்லை. அதேபோல் அதிமுக – பாஜக இடையே பல விவகாரங்கள் ஒத்துப் போகிறது. இரு கட்சிகளிலும் நீட் விவகாரம், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் கருத்து வேறுபாடுகள் உள்ளது. அதனால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. பாஜக வேகமாக வளர வேண்டும் என்று நினைக்கிறது என்று தெரிவித்தார்.

கர்நாடகா தேர்தல்

கர்நாடகா தேர்தல்

தொடர்ந்து கர்நாடகா தேர்தல் பற்றிய கேள்விக்கு, கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இன்னும் சில வாரங்களில் கர்நாடகா தேர்தல் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த சில மாதங்களில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி 11 முறை வெவ்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கர்நாடகா வந்துள்ளார். பாஜக ஆட்சியில் கர்நாடகா வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. கர்நாடகாவில் பாஜக இருமுறை ஆட்சிக்கு வந்திருந்தாலும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. இம்முறை அதனை மாற்ற வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *