“சிவாவை வந்து பார்த்து மனசு விட்டு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். அவரும் சொல்லியிருக்கிறார். ” – கே.என்.நேரு

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

“சிவாவை வந்து பார்த்து மனசு விட்டு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். அவரும் சொல்லியிருக்கிறார். ” – கே.என்.நேரு

‘அழைப்பிதழ் மற்றும் கல்வெட்டில் ஏன் திருச்சி சிவா பெயரைப் போடவில்லை!’ என திருச்சி சிவா ஆதரவாளர்கள், கே.என்.நேருவுக்கு கருப்புக் கொட்டி காட்டியதும், அதைத்தொடர்ந்து கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீட்டினுள் புகுந்து அடித்து நொறுக்கிய சம்பவமும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் வைத்தே திருச்சி சிவா தரப்பிற்கும், கே.என்.நேரு தரப்புக்கும் இடையே நடந்த மோதல் சம்பவங்கள் பிரச்னையின் வீரியத்தை அதிகமாக்கின. இதில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெரும் சர்ச்சையை உண்டாக்கிய இந்த சம்பவத்தை, எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்துக்கொண்டு கடுமையாக விளாசித் தள்ளின. இந்நிலையில் தான் திருச்சி சிவாவின் வீட்டிற்கே அமைச்சர் கே.என்.நேரு சென்று, நடந்த சம்பவம் குறித்து பேசினார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

திருச்சி சிவாவுடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திருச்சியிலே பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்பாக இருந்தது. எந்த ஊரிலே என்ன நிகழ்ச்சி என்பது கூட எனக்குத் தெரியாது. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மேயர், சட்டமன்ற உறுப்பினர் அழைக்கும் இடங்களுக்கு நான் போவது வழக்கம். அப்படிப் போகின்ற போது இந்த ராஜா காலனியிலே ஒரு ஷட்டில் கோர்ட் திறக்கவேண்டுமென்று சொன்னார்கள். அது எந்த இடத்தில் அமைந்திருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது. என்னுடைய தொகுதி என்பதால் இங்கு வந்தேன். அப்போது சிலர் என்னிடம் வந்து ‘எங்களுடைய அண்ணன் பெயரைப் போடாமல் எப்படி வரலாம்!’ என்றார்கள். ‘நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை போய்ப் பாருங்கய்யா… நான் என்னய்யா பண்ணுவேன்’னு சொல்லிட்டு அங்கிருந்து போயிட்டேன்.

அதற்குப் பிறகு சில நடக்கக் கூடாத விஷயங்கள் அதுவும், கழகக் குடும்பத்திலே, கழகத்தில் இருப்பவருடைய வீட்டிலே நடந்தது. என்னுடைய துரதிஷ்டம் என்னவென்றால், கருப்புக் கொடி காட்டியவர்களை ஏற்றுவதற்காக ஒரு பெரிய போலீஸ் வேனை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார்கள். அதனால் நடந்த சம்பவம் எனக்கு தெரியாமல் போய்விட்டது. நான் தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டேன். அதன்பிறகு தான் இப்படி சம்பவம் நடந்துவிட்டது என்றும், வழக்கு பதிவு செய்து ஆட்களை தேடி வருகிறார்கள் என்பதும் தெரியவந்தது. அப்போதே சிவா எங்கிருக்கிறார், வெளிநாட்டிலிருந்து வந்துவிட்டாரா என்று கேட்டேன். கம்யூனிகேஷன் கேப்பால் இப்படி நடந்துவிட்டது. இனி அப்படி நடக்காது” என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பு
செய்தியாளர்கள் சந்திப்பு

தொடர்ந்து பேசியவர், “மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ‘நீங்கள் இருவருமே திருச்சியில் கழகத்தை கட்டிக்காத்து வருகிறவர்கள், உங்களுக்குள் இப்படி எந்தப் பிரச்னையும் இருக்கக்கூடாது’ என்றார். அப்போது ‘எங்களுக்குள்ள எந்த பிரச்னையுமே இல்லைங்கண்ணே. அவர் எங்க ஊர்க்காரரு’ன்னு நான் சொன்னேன். உடனே முதலமைச்சர் அவர்கள் ‘நீ நேரா போய்ப் பார்த்து அவரை சரி பண்ணிட்டு சமாதானப்படுத்திட்டு  வா. உங்களுக்குள்ள எந்தவிதமான பிரச்னையும் இல்லைங்கிறதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்றார். நான் வந்து சிவாவிடம் பேசினேன். என்னை விட அவர் 2 வயது சிறியவர். தம்பி என்று தான் கூப்பிடுவேன். ‘நீங்க ஒன்னும் நினைக்காதீங்க. எனக்குத் தெரிஞ்சிருந்தா நான் அனுமதிச்சிருக்கவே மாட்டேன். முதலமைச்சர் கேட்டபோது கூட, அந்த வேலையை எல்லாம் நான் செய்வனாங்க என்று சொன்னேன்’.

முதல்வரோ ‘சிவா தி.மு.க.,வில் ஒரு மூத்த தலைவர். நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருப்பவர். அவருக்கு அவமதிப்பு ஏற்பட்டால் அது கழகத்திற்கு நல்லதா!’ என்று கேட்டார். ‘எனக்கு ஒன்னும் இல்லைங்க. நான் போய் அவரை சரியா 6 மணிக்கு பார்த்துட்டு வந்து உங்ககிட்ட பேசுறேன்’னு சொன்னேன். சிவாவை வந்து பார்த்து மனசு விட்டு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். அவரும் சொல்லியிருக்கிறார். இனி இதுமாதிரி எதுவும் நடக்கக்கூடாது, நடக்காது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *