ஒர்க் அவுட் ஆகுமா புதிய பிளான்? `சசிகலா-டிடிவி-யுடன் கைகோர்க்கிறாரா?’ ஓபிஎஸ்- புதிய திட்டம்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

சசிகலா, டி.டி.வி தினகரனுடன் கைகோர்த்து, தென் மாவட்டங்களில் எடப்பாடிக்கு செல்வாக்கு இல்லாமல் செய்து, பா.ஜ.க-வுடன் கூட்டணி பேரம் பேசலாம் என வியூகம் வகுத்து வருகிறார் ஓ.பி.எஸ் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.

ஜூலை 11-ல் நடந்த அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அ.தி.மு.க-வின் தனிப்பெரும் தலைவராக தன்னை முன்னிறுத்த எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலையும் வேக வேகமாக அறிவித்து, வேட்பு மனுத்தாக்கலும் செய்துவிட்டார். வேறு எவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய மாட்டார்கள் என்பதால், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

ஆனால் மறுமுனையில் ஓ.பன்னீர்செல்வம் அடுத்தக்கட்ட நகர்வுகள் என்னவென்றே தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். இந்த சூழலில் மார்ச் 16-ம் தேதி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எடப்பாடி பழனிசாமி ஆரம்பம் முதல் தற்போது வரை சட்டத்துக்குப் புறம்பாகவே நடந்து கொண்டிருக்கிறார். வாய்ப்பு இருந்தால் டி.டி.வி தினகரனோடு இணைந்து செயல்படுவேன், விரைவில் சசிகலாவை சந்திப்பேன்” என்றார்.

“எடப்பாடி பழனிசாமியால் அ.தி.மு.க ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சியாக மாறிவருகிறது, அவர்களிடமிருந்து இரட்டை இலையை மீட்க வேண்டும்” என்று ஏற்கெனவே அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பேசி வருகிறார். இந்த நிலையில் டி.டி.வி தினகரனோடு இணைந்து செயல்படுவேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது அரசியல் களத்தில் விவாதப் பொருளாகியிருக்கிறது.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

இது தொடர்பாக ஓ.பி.எஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, “எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை கட்சியை தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டுமென்பதில் மட்டும்தான் குறியாக இருக்கிறார். கட்சியை கைக்குள் போட முயற்சிக்கும் அளவுக்கு, தேர்தல்களில் வெற்றி பெற அவரால் முடியவில்லை. அதைத்தான் நாங்கள் எங்களுக்கு சாதகமாக பார்க்கிறோம். அவர்களின் கோட்டையாக சொல்லிக்கொள்ளும் கொங்கு மண்டலத்தில் நடந்த இடைத்தேர்தலிலேயே படுதோல்வியடைந்து, கோட்டை விட்டிருக்கிறார்கள். அப்படியானால் சின்னம்மா, அண்ணன் ஓ.பி.எஸ், டி.டி.வி மூவரும் கைகோர்த்தால் தென் மாவட்டங்களில் எங்கள் பக்கம்தான் ஆதரவு அலை வீசும்.

அண்ணாமலை, ஓபிஎஸ்
அண்ணாமலை, ஓபிஎஸ்

ஆர்.பி.உதயகுமாரோ, ராஜன் செல்லப்பாவோ அவரவர் பகுதிக்குள் வேண்டுமானால் செல்வாக்கை செலுத்தலாம். ஆனால் ஒட்டுமொத்த தென் மாவட்ட மக்களையும் அவர்களால் அணிதிரட்ட முடியாது. இதை பா.ஜ.க-விடம் விளக்கி எங்கள் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்குப் பேசுவோம். எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-வை கழட்டிவிட்டால் போதும் என்ற மனநிலையில் இருப்பதால் பா.ஜ.க-வும் நிச்சயம் இதைப் பரிசீலிக்கும். அப்போது கட்சியும் எங்களிடம் தானாகவே வந்துசேரும் வாய்ப்பு இருக்கிறது” என்கின்றனர்.

ஓ.பி.எஸ் இப்படியொரு வியூகத்தை வகுத்திருக்கும் நிலையில்தான், அ.தி.மு.க தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி என்றால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என அண்ணாமலை நிர்வாகிகள் மத்தியில் பேசியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. தனித்துப் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாவிட்டாலும், வாக்கு வங்கியை உயர்த்திக்காட்டி, தன் தலைமையில் பா.ஜ.க வளர்ந்திருக்கிறது என்ற பிம்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதே அண்ணாமலையில் திட்டம் என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில். அண்ணாமலையின் இந்த வியூகத்துக்கு, ஓ.பி.எஸ். வகுத்திருக்கும் வியூகம் பொருந்திப்போவதாலும், எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-வை உதறிவிட்டு எதேச்சிகரமாக செயல்படத் தொடங்கியிருப்பதாலும் ஓராண்டுக்குள் கூட்டணிக் கணக்குகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால், “கூட்டணிக் கணக்குகள் எப்படி வேண்டுமானாலும் மாறட்டும்,. பா.ஜ.க வெளியேறிவிட்டால் நமக்கு லாபம்தான், நட்டம் அவர்களுக்குத்தான். எனவே அதைப்பற்றி கவலைப்படவே வேண்டாம். கட்சியும், சின்னமும்தான் முக்கியம், அது நம்மிடத்தில்தான் இருக்கிறது. பூத் கமிட்டியை வலுப்படுத்தும் வேலையை கவனமாகப் பாருங்கள். அ.ம.மு.க., ஓ.பி.எஸ் ஆதரவாளர்களில் அதிருப்தியில் இருப்பவர்களை நம்முடன் சேர்க்கும் பணியையும் தீவிரமாக முன்னெடுங்கள். மற்றதெல்லாம் தானாகவே நடக்கும்” என நிர்வாகிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *