நவரத்தின அறிவிப்புகள்! மகளிர் காவலர்கள் நலன் காக்க வெளியிட்ட முதல்வர்..

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/golden-jubilee-of-tn-women-police-cm-stalin-announce-navarathna-scheme-503326.html

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

பெண்கள் காவல்துறையின் பல பிரிவுகளிலும் பணி புரிந்து வருகின்றனர். அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பொன்விழா கொண்டாடும் மகளிர் காவலர்களுக்காக நவரத்தினம் போல 9 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொன்விழா என்று சொல்லப்பட்டாலும் இது பெண்களுக்கான விழா. பெண்கள் உயர் கல்வி பெற்று உயரிய பதவியை வகிக்க வேண்டுமென கூறியவர் கலைஞர். பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரவேண்டும், அவர்கள் மேடைகளில் முழங்க வேண்டும் என்று கூறியவர் அண்ணா. தமிழ்நாட்டில் 35,000 பெண் காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்றால் அதற்கான விதையை விதைத்தவர் கலைஞர் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மகளிர் காவல்துறையின் பொன்விழா ஆண்டுவிழாவில் அவள் திட்டத்தை தொடக்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் காவல் துறையில் 1973இலிருந்து பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இந்தாண்டு தமிழ்நாடு மகளிர் காவல் துறைக்குப் பொன்விழா ஆண்டு. 1973இல் முதன்முதலாகப் பெண்கள் 20 பேர் காவலர் பணிக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சிக்குப் பிறகு 1974 நவம்பர் 1இல் மகளிர் காவலர்களின் முதல் அணிவகுப்பு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது. பெண் காவலர் அணிவகுப்புக்கு உதவி ஆய்வாளர் உஷாராணி தலைமை தாங்கினார்.

பொன்விழா கொண்டாடும் இந்த நாளில் நவரத்தினம் போல மகளிர் காவலர்களுக்கு 9 சிறப்பான அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1. பெண் காவலர்கள் குடும்பத்தலைவிகளாகவும் இருந்து கொண்டு கடினமான காவல் பணியும் செய்து வருவதால் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரோல் கால் எனப்படும் காவல் வருகை அணிவகுப்பு காலை 7 மணிக்கு பதிலாக இனி காலை 8 மணிக்கு தொடங்கும்.

2. சென்னை, மதுரை பெருநகரங்களில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் கட்டப்படும்.

3. அனைத்து காவல்நிலையங்களிலும் மகளிர் காவலர்களுக்காக கழிவறை வசதியுடன் ஓய்வறை வசதி கட்டித்தரப்படும்.

4. பெண் காவலர்கள் காவல் நிலையங்களில் பணிக்கு வரும் போது, தங்களுடைய குழந்தைகளை விட்டு விட்டு வருவதை கருத்தில் கொண்டு சில மாவட்டங்களில் காவல் குழந்தைகள் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது. அதை முழு அளவில் மேம்படுத்தி செயல்படுத்தும் விதமாக விரைவில் தேவையான அனைத்து இடங்களிலும் காவல் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும்.

5. பெண் காவலர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக, அவரது பெயரில் கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

6. ஆண் காவலர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெறும் இன்றைய சூழ்நிலையில், பெண் காவலர்கள் குடும்பத்தலைவிகளாகவும் பல பொறுப்புகளை ஆற்ற வேண்டியிருப்பதால், அவர்களின் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல் அளிக்க உத்தரவிடப்படும்.

7. பெண் காவலர்களுக்கு ஆண்டுதோறும் துப்பாக்கிச்சுடும் போட்டி நடத்தப்பட்டு விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படும். தேசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியை தமிழ்நாட்டில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

8. பெண் காவலர்களின் பிரச்சினைகள், தேவைகளை கலந்து ஆலோசனை செய்யும் விதமாக காவல்துறையில் பெண்கள் எனும் தேசிய மாநாடு ஆண்டு தோறும் தமிழ்நாட்டில் நடத்தப்படும்.

9. பெண் காவலர்கள் தங்கள் பணியை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ளும் விதமாக குடும்பம் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளும் விதமாக டிஜிபி அலுவலகத்தில் வழிகாட்டும் ஆலோசனை குழு அமைக்கப்படும்.

இந்த அறிவிப்புகள் உங்களுக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி தரும் என்று நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். முதல்வர் ஒவ்வொரு அறிவிப்பையும் வெளியிடும் போது மகளிர் காவல்துறையினர் கரவொலி எழுப்பிக்கொண்டே இருந்தனர். அதைக்கேட்ட முதல்வர் உங்களின் மகிழ்ச்சியை கரவொலியின் மூலம் உணருகிறேன் என்று தெரிவித்தார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/golden-jubilee-of-tn-women-police-cm-stalin-announce-navarathna-scheme-503326.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *