பணத்துக்காக “மதக்கலவர” சதி!“தமிழ்நாடே பத்தி எரியும்”கைது செய்யப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி திடுக்கிடும் பின்னணி

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

கட்டாய மதமாற்றத்தால் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்துவேல், பள்ளி தாளாளரிடம் ரூ.25 லட்சம் பணம் தராவிட்டால் மதக்கலவரத்தை தூண்டுவோம் என்று மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் பின்னணி குறித்து பார்ப்போம்.

இதுகுறித்து பங்குதந்தை டோமினிக் சாவியோ அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது, “ஐயா, நான் கடந்த ஜூன் 15 2019 முதல் பங்கு தந்தையாகவும் பள்ளிகளின் தாளாராகவும் பணிபுரிந்து வருகிறேன். சுமார் 5 மாதங்களுக்கு முன்பு அரியலூரைச் சேர்ந்த வினோத் என்பவர் என்னை சந்தித்து பாதர் என்னிடம் VHP அமைப்பில் அரியலூர் மாவட்ட செயலாளராக உள்ள முத்துவேல் என்பவரோடு உரையாடும் போது பதிவு செய்த உரையாடல் ஒன்று உண்டு.

அதில் முத்துவேல் என்பவர் உங்கள் சம்மந்தமாக பேசி உள்ளார். அதே போல் மைக்கேல்பட்டி லாவண்யா விஷயமும் பேசியிருக்கிறார் என்று சொன்னார். உங்களை பற்றி சொல்லும் போது உங்களுக்கு எதிராக லித்தோஸ் அடிச்சி அனுப்பி விடுறேன். அதை வைத்துக்கொண்டு அவரிடம் 25 லட்சம் பணம் கேள், எனக்கும் வாங்கி கொடு நீயும் லாங்கி கொள் என்று பேசியுள்ளார் என சொன்னார்.

மேலும் அந்த உரையாடல்களில் டக்குன்னு முடிவு சொல்லு நான் டிசைன் பண்ணி அனுப்பிச்சிவிடுறேன் என்ன கண்டென்ட் என்றால். ‘அரியலூர் பள்ளிகளில் இந்து பெண்களை வன்கொடுமை செய்யும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த பள்ளியில் படிக்கின்ற இந்துக்களே உஷார்! உஷார்! உங்கள் பிள்ளைகளை கிறிஸ்தவ பள்ளிகளில் சேர்க்காதீர்கள்.’ அப்படின்னு சொல்லி கிறிஸ்துவ பள்ளிகளுக்குன்னு மொத்தமா போட்டு அடித்துவிட்டால்… மான்போர்ட், நிர்மலா ஸ்கூல் எல்லாத்துக்கும் ஆயிடும்.

இது பெரிய அளவில் தமிழ்நாடு முழுவதும் பத்திகிட்டு எரியும். தமிழ்நாடு முழுவதும் ஆர்பாட்டம் பண்ண நான் ஏற்பாடு பண்ணிவிடுவேன். இது கரெக்டா போனா நீயும் சம்பாதிக்கலாம் நானும் சம்பாதிக்கலாம். ஒரு லட்சம் செலவுக்கு கேள் என பேசியுள்ளார். அப்போது நான் வினோத்திடம் என்ன விஷயம் என்று கேட்டேன். அதற்கு வினோத் ஏதோ அவனிடம் உள்ளது. ஏதாவது கொடுத்து சரி பண்ணிவிடலாம் என்று சொன்னான்.

மைக்கேல் பட்டி பள்ளியில் படித்த லாவண்யா விஷயத்தை பெரிதாக்கி நாடு முழுவதும் ஆர்பாட்டம் போராட்டம் நடத்த காரணமானவன் முத்துவேல்தான். நம் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் சம்மந்தமாக ஏதேனும் வன்கொடுமை போன்ற விஷயங்களை வதந்தியாக பரப்பி ஏதாச்சும் பண்ணிவிடுவான் என கூறினான். நான் என் மீது எந்த தவறும் இல்லை. இந்த விஷயத்தை விடு என்று சொல்லிவிட்டேன்.

தற்போது வினோத்திற்கு புனித லூர்து அன்னை ஆலயத்திற்கு சொந்தமான கடை கொடுக்கவில்லை என்ற விரோதத்தில் ஏற்கனவே பிரச்சனை செய்து நான் கொடுத்த புகாரில் வழக்கு உள்ளது. இதற்கு பிறகு என் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வளைதளங்களில் இந்த முத்துவேல் என்பவர் என்னை பற்றி அவதூறு பரப்பி வருகிறார்.

என் மீது கற்பழிப்பு… வன்கொடுமை… போன்ற குற்றங்களை சுமத்தி என்னை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சி செய்து வருகின்றார். நான் அரியலூரில் உள்ள நான்கு பள்ளிகளுக்கு பொறுப்பானவர். எனது அரியலூர் பங்கில் 420 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அதில் அரியலூர் நகரத்தில் மட்டும் 350 குடும்பங்கள் உள்ளன.

சந்தனமாதா கோவில் தெருவில் 80 குடும்பங்கள் உள்ளன. இவை அனைத்தும் எனது பொறுப்பில் தான் இருக்கின்றன. எனவே இவர்கள்! பேசியுள்ள விஷயம் அரியலூரில் கிறிஸ்தவ இந்து மக்களிடையே வேண்டுமென்றே வதந்திகளை (பரப்பி கலவரம் ஏற்படுத்த வேண்டும். மேலும் தமிழ்நாடு முழுவதும் இதனை வைத்து கலவரம் செய்ய வேண்டும் என்ற ரீதியில் உள்ளது.

இந்த முத்துவேல் ஏற்கனவே கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக பல பிரச்சனைகள் செய்து வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இப்போது அமைதியாக உள்ள நல்லிணக்கத்தோடு உள்ள அரியலூர் இந்து – கிறிஸ்தவ மக்களிடையே பிரச்சனை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றார். கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசியுள்ளார். எனவே இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். நன்றி!’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இது தொடர்பாக முத்துவேலின் பரபரப்பு ஆடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அவர் மீது மதக்கலவரத்தை தூண்டுதல், பணம் கேட்டு மிரட்டுதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *