திருமாவளவனுக்கு எச்.ராஜா எச்சரிக்கை! விசிகவினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டம்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

அநாவசியமாக திருமாவளவன் பாஜகவுடன் மோத வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா எச்சரிக்கை விடுத்த நிலையில், எச்.ராஜா செல்லும் வழியில் விசிகவினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் அருகே கோவிலுக்குச் சென்ற பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, செய்தியாளர்களைச் சந்தித்தபோது விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்தார்.

இந்த தகவல் அறிந்த விசிக கட்சியினர், எச்.ராஜா வரும் வழியில் கருப்பு கொடி காட்டி, பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று முன்தினம் தடையை மீறிச் சென்றதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கைலாசநாதர் ஆலயத்தில் பைரவேஸ்வரருக்கு நடைபெற்ற யாக பூஜையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திமுகவையும், விசிகவையும் விமர்சித்துப் பேசினார். அவர் பேசுகையில், ‘திருமாவளவன் பாஜகவோடு அநாவசியமாக மோத வேண்டாம். இருக்கிறதும் போய் விடும். 1,000 ஓட்டில் வெற்றி பெற்ற அவர் ஒரு வெகுஜன விரோதி. திருமாவளவன் தன்னை திருத்திக் கொண்டு, தனக்கு கீழ் உள்ளவர்களையும் திருத்தி மனிதர்களாக மாற்ற வேண்டும்.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 2,000 கோயில்களை புனரமைக்கப் போவதாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. திமுக அரசால் கோவில்களை நிர்வாகம் செய்ய முடியவில்லை என்றால் பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும். பழமையான மானம்பாடி கோயில் விக்ரஹங்கள் சிதறிக் கிடப்பதைப் போல ஆட்சியாளர்களின் குடும்பங்களும் சிதறி நாசமாகிப் போவார்கள்’ எனக் காட்டமாகப் பேசினார்.

இந்த யாகம் முடிந்து எச்.ராஜா கும்பகோணம் திரும்பும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், எச்.ராஜா கார் செல்லும் வழியில், கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் அங்கு வந்து அவர்களை கலந்து போகுமாறு அறிவுறுத்தினர். அவர்கள் கலைந்து செல்லாததால் சோழபுரம் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *