ஈபிஎஸ் மீது வழக்கு… அதிமுகவினர் போராட்டம்..!

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை அடுத்த மேட்டுப்பட்டி அருகே உள்ள அதிமுக மாவட்ட அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு சென்ற அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமானத்தில் வந்த நபர் ஒருவர் விமர்சனம் செய்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியுடன் வருகை தந்தவர்கள் அந்த நபரை தாக்கினர். இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மீது போடப்பட்டுள்ள வழக்கை கண்டித்தும் உடனடியாக அந்த வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி புதுக்கோட்டை அடுத்த மேட்டுப்பட்டி அருகே உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தின் முன்பு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்: அதிமுக கொடுத்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் எதிர் தரப்பினரிடம் புகார் மனுவை பெற்றுக் கொண்டு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல் விமானத்தில் பயணம் செய்தார். அவ்வாறு பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திரும்பி சென்றார். அப்படி இருக்கும் பொழுது வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த செயல் காவல்துறை நடுநிலையோடு இல்லை என்பதை காட்டுகிறது.  இதை வன்மையாக கண்டிக்கின்றோம். காவல்துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக மட்டும் இருக்கக் கூடாது நடுநிலையோடு செயல்பட வேண்டும். காவல்துறை நிலை மறந்து நடுநிலையை மறந்து ஆளும் தரப்பிற்கு துணை போகக்கூடிய அளவில் செயல்பட்டுள்ளது. இந்த வழக்கு ஏற்கத்தக்கதல்ல கண்டிக்கத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் தமிழ்நாட்டில் வன்முறைக்கு வழி வகுக்கக் கூடிய வகையில் ஆளும் அரசும் காவல்துறையும் செய்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். 

இந்த வழக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு பழிவாங்கக்கூடிய வகையில் வன்மத்துடன் போடப்பட்டுள்ளது ஒரு சில வழக்குகளை போட்டால் அதிமுக முழுமையாக முடக்கி விடலாம் என்ற எண்ணத்தோடு ஆளுங்கட்சி செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல வேதனை கூறியது. தவறு செய்யப்படாமல் உள்ள நிலையில் ஏன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தான் கேள்வியே. பதிந்த வழக்கை எவ்வாறு கையாள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் ஆனால் இந்த வழக்கு ஏன் பதியப்பட்டது என்பதற்காக தான் ஆர்ப்பாட்டம் செய்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *