தோசை சுடும் தலைவரா அண்ணாமலை? அண்ணாமலையை கலாய்க்கும் தி.மு.க ஐடி விங்!

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கமெண்ட் ஒன்றிற்கு பதிலடியாக திமுக சார்பாக வீடியோ ஒன்று இணையத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது.

பாஜக நிர்வாகிகள் பலர் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக – பாஜக இடையிலான மோதல் தற்போது முற்றி உள்ளது. பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஐடி விங் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து உள்ளார். அதேபோல் பாஜக நிர்வாகி திலீப் கண்ணனும் அதிமுகவில் இணைந்து உள்ளார்.

பாஜக நிர்வாகிகளை இப்படி அதிமுக தங்கள் பக்கம் தூக்கியதை பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். முக்கியமாக திராவிட கட்சிகளை கடுமையாக தாக்கி அவர் பேசி இருந்தார்.

அண்ணாமலை தனது பேட்டியில், பாஜகவினரை இழுத்தால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு திராவிட கட்சிகளின் நிலை உள்ளது. திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து நாங்கள் கட்சி நடத்தியதாக கூறி வந்தனர். ஆனால் இப்போது பாருங்கள். பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன. திராவிட கட்சிகள் இப்போது யாரை நம்பி இருக்கிறார்கள்.

எங்களின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் அங்கே சென்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களை திராவிட கட்சிகளும் ஏற்றுக்கொண்டு உள்ளன. எங்களின் வயசு என்ன? அவர்களின் வயசு என்ன? எங்களை நம்பி அவர்கள் இருக்கிறார்கள்.. நாங்கள் எத்தனை முறை ஆட்சியில் இருந்திருக்கிறோம். அவர்கள் எத்தனை முறை இருந்துள்ளனர். தமிழ்நாட்டில் நாங்கள் வளர்ந்து இருக்கிறோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும், கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அப்படித்தான் புதிய தலைவர்களுக்கு பதவி அளிக்க முடியும்.

நான் தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை. நான் அரசியல் செய்ய வந்து இருக்கிறேன். பாஜகவை முன்னேற்ற வந்து இருக்கிறேன். அதை செய்வேன். கலைஞர்.. அம்மா போல முடிவு எடுப்பேன். நான் தலைவன்.. நான் யாருக்கும் கவலைப்பட மாட்டேன். நான் தலைவரை போல சில முடிவுகளை எடுப்பேன். அதற்காக நான் பயப்பட மாட்டேன். நான் எதை பற்றியும் கவலைப்படாமல் முடிவு எடுப்பேன். பாஜக செட்டில் ஆகும் வரை இங்கே சில அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும். என்னை டெல்லி மாற்றிவிடும் என்ற பயத்தில் முடிவு எடுக்காமல் இருக்க மாட்டேன். தமிழ்நாட்டில் பாஜக அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம்., என்று குறிப்பிட்டு இருந்தார்

பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய தோசை கமெண்டிற்கு பதிலடியாக திமுக சார்பாக வீடியோ ஒன்று இணையத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. அதில் பாஜக தலைவர் அண்ணாமலை உண்மையிலேயே தோசை சுட்ட காட்சிகளை பதிவேற்றி உள்ளனர். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது பிரச்சாரத்தில் பல தலைவர்கள் டீ போடுவது, காபி போடுவது என்று வித்தியாசமாக பிரச்சாரம் செய்தனர். பாஜக தலைவர் அண்ணாமலை இதில் தோசை சுட்டு பிரச்சாரம் செய்தார். அதைதான் தற்போது திமுக ஐடி விங் பகிர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *