எடப்பாடியின் மாஸ்டர் பிளான்! பதறும் அண்ணாமலை! உடைகிறதா அதிமுக பாஜக கூட்டணி?

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

பாஜகவுக்குள் உட்கட்சி பூசல்கள் ஒருபக்கமும், கட்சியில் இருந்து விலகியவர்கள் அதிமுக பக்கமும் இணைந்து வரும் நிலையில், இதுகுறித்த விவாதங்களும், அலசல்களும் வலம்வருகின்றன.. என்ன நடக்கிறது அதிமுக – பாஜக கூட்டணிக்குள்?

தமிழகத்தில் பாஜவின் ஐடி விங்க் தலைவர் நிர்மல் குமார் நேற்று முன்தினம் பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்… இது திடீரென திருப்பத்தை ஏற்படுத்தியது

இந்த அதிர்ச்சி முடிவதற்குள்ளேயே அண்ணாமலை மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜக மாநில செயலாளர் திலீப் கண்ணன் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இதில், நிர்மல்குமார் விலகல்தான் அதிக அளவு அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. காரணம், பாஜக தலைவர் அண்ணாமலையுடன் நெருக்கமாக இருந்தவர், அதிலும் கட்சி ஐடி பிரிவின் மாநில தலைவராக இருந்தவர், அதிமுகவில் இணைந்தது பாஜவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பிறகு, ‘சி.டி.ஆர்.நிர்மல் குமார், நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்’ என்று பதிவிட்டிருந்தாலும், பாஜக விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி இதற்கு பதிலடி தந்திருந்தார்.. நிர்மல்குமாருக்கு காட்டத்தை தெரிவிக்காமல், எடப்பாடியிடம் சீறியிருந்தார்.

நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம், அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவரா? ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? என்று கேட்டிருந்தார்… அண்ணாமலையின் நெருங்கிய ஆதரவாளரான அமர்பிரசாத் ரெட்டி, எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியில் மீண்டும் மோதலை தீவிரப்படுத்தியுள்ளதாக என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்படி திடீரென கட்சியில் விலகியதற்கும், இன்னொரு கட்சியில் இருந்து விலகியதற்கும் இதற்கு இரண்டு விதமான காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.. முதலாவதாக, ஒரு கூட்டணி கட்சியில் உள்ள நிர்வாகி ஒருவர், கூட்டணியில் இருக்கும் இன்னொரு கட்சியில் தங்களை இணைத்து கொள்வதை எந்த கட்சியும் விரும்பாது… அப்படியே இணைய முற்பட்டாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுதான் நடைமுறையாக தமிழக அரசியலில் இருந்து வருகிறது.. அப்படி இருக்கும்போது, நிர்மல்குமார் கட்சியில் இருந்து விலகியதைவிட, அதிமுகவில் அவரை இணைத்து கொண்டதுதான் தவறு என்கிறார்கள்.

மூத்த தலைவர்கள் நாராயணன் திருப்பதி, வெங்கடேசன், கோவர்த்தன், குஷ்பு போன்ற பாஜக நிர்வாகிகள் சிலருக்கு, சமீபத்தில் மத்திய அரசு பதவிகளும் பொறுப்புகளும் வழங்கப்பட்டன… இதையடுத்து, தனக்கு எந்த பதவியும் கிடைக்காத அதிருப்தியில் தான், நிர்மல்குமார் அதிமுகவுக்கு தாவிவிட்டதாக காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், இன்னொரு சாரார் அதை மறுக்கிறார்கள்.. ஒருகட்சிக்குள் நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்படுவது இயல்புதான். அப்படியானால், கட்சியில் இருந்து விலகி மட்டும் இருக்கலாமே? எதற்காக விலகும்போது, கட்சி தலைமையை மோசமாக விமர்சிக்க வேண்டும்? அப்படியே கட்சியில் இருந்து விலகினாலும், நேராக ஏன் அதிமுக போக வேண்டும்?

இதற்கு முன்பு எத்தனையோ பேர் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கும், பாஜகவில் இருந்து அதிமுகவுக்கும் தாவியுள்ளார்கள். ஆனால், எல்லாருமே இப்படி தலைமை மீது சேற்றை வாரி பூசிவிட்டு போகவில்லையே.. அதனால், நடப்பதையெல்லாம் பார்த்தால் உள் அர்த்தம் நிறைந்த அரசியலாகவே உள்ளது.. ஈரோட்டில், அண்ணாமலையுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்ய போவதில்லை என்று எடப்பாடி அறிவித்தார்.. சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறுவதற்காக இப்படி பேசியதாகவே கருதினாலும், அடுத்த சில தினங்களிலேயே, அதிமுக – பாஜக கூட்டணி எம்பி தேர்தலிலும் தொடரும் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.. இப்படி இருக்கும்போது, திடீரென அதிமுக – பாஜக கூட்டணி இடையே உரசல் எழுவதற்கு வாய்ப்பே இல்லையே.

‘பாஜகவுக்கு தாங்கள் பணியவில்லை.. பாஜக மீது தங்களுக்கு ஒருவித வெறுப்புணர்வு இருக்கவே செய்கிறது’ என்பதை வெளிப்படுத்தி கொள்ளவே, இரு தரப்பும் பேசிவைத்து கொண்டும் செய்யும் வேலை இதெல்லாம்.. பாஜகவில் இருந்து விலகியவர்கள், நேராக திமுக, காங்கிரஸ், விசிக என்று செல்லாமல், அதிமுகவுக்கு செல்வதை வைத்தே இந்த சூட்சுமத்தை புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள்.. இதே விஷயத்தைதான் மூத்த தலைவர் கேசி பழனிசாமி நாடகம் என்று ஒரே வார்த்தையில் விமர்சிக்கிறார்.. ஒரு சேனலுக்கு கேசி பழனிசாமி அளித்த பேட்டியில் சொன்ன கருத்துக்கள் இதுதான்.

எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, மேலிட பாஜகவை எதிர்ப்பவர் கிடையாது.. தமிழக மாநில தலைவர் மீது அதிருப்தி இருக்கலாமே தவிர, டெல்லி பாஜகவிடம் இதுவரை எதிர்த்தது கிடையாது.. கடந்த 2016முதல் இப்போதுவரை, பாஜகவின் கொள்கைகளை அல்லது தமிழர் நலனை பாதிக்கக்கூடிய விஷயங்களை இதுவரை ஏதாவது ஒன்றையாவது எடப்பாடி பழனிசாமி எதிர்த்திருக்கிறாரா? அண்ணாமலை – எடப்பாடி இருவரிடமும், தனிப்பட்ட முறையில், சாதீய ரீதியாக குற்றச்சாட்டுகள் வருமேயொழிய, தேர்தல் சமயத்தில் இவங்க 2 பேருமே ஒன்று சேர்ந்து கொள்வார்கள்.. எனவே அண்ணாமலைக்கும் – எடப்பாடிக்கும் மிக நல்ல உறவு இருக்கிறது.. இப்போது கட்சி தாவல் நடப்பதெல்லாம் ஒரு நாடகம்.

கருத்து வேறுபாடு இருப்பது போலவும், மனச்சங்கடம் இருப்பது போலவும் 2 பேருமே சேர்ந்து ஏற்படுத்துகிற நாடகம்.. இது என் தனிப்பட்ட கருத்து. தேர்தல் சமயத்தில் 2 பேரும் கைகோர்த்து செயல்படுவார்கள்.. அண்ணாமலையின் தனிப்பட்ட ஆவர்த்தனம் பிடிக்காத காரணத்தினாலும், திமுக பக்கம் போக முடியாது என்ற காரணத்திலும்கூட, எடப்பாடி பக்கம் அதிருப்தியாளர்கள் வந்திருக்கலாம் என்று கூறியுள்ளார் கேசி பழனிசாமி.. இதனிடையே, இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. வருகிற 9ம் தேதி அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து 10ம் தேதி அதிமுக மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. பொதுவாக, அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழி வேண்டும்.. 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழி வேண்டும்.. அதனால், இப்போதுள்ள சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.. இதற்கான அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.. எனவே, தான் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படும்வரை, பாஜகவுடன் விலகல் போக்கில் இருப்பதாக காட்டி கொள்வதற்காகவும், இப்படியான காய்நகர்த்தல்கள் நடப்பதாகவும் சொல்கிறார்கள். ஆக மொத்தம், அதிமுக – பாஜக கூட்டணி உறவு குறித்து, 3 விதமான அலசல்கள் வெடித்து கிளம்பி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *