மூன்று மடங்கு இராணுவ பட்ஜெட்டை உயர்த்திய சீனா, அதிர்ச்சியில் இந்தியா!-ஊடகவியலாளர் இராகவேந்திரன்.

இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனா, தனது ராணுவத்துக்கு இந்த முறை அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளது.

கிட்டத்தட்ட நடப்பாண்டு பட்ஜெட்டில் இந்திய ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 3 மடங்கு அதிக நிதியை சீனா தனது ராணுவத்துக்காக ஒதுக்கியுள்ளது.

இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், சீன ராணுவத்துக்கு இவ்வளவு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது ஆசிய பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தேதியில் உலகுக்கே அச்சுறுத்தலாக ஒரு நாடு இருக்கிறது என்றால் அது சந்தேகமே இல்லாமல் சீனா தான். இப்போது வரை தனது நாட்டை விரிவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. ஒருபுறம் இந்தியா, பூடான், ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் எல்லைப் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. மறுபுறம், தைவான், ஹாங்காங் போன்ற தன்னாட்சி பிரதேசங்களை தனக்கு சொந்தம் எனக் கூறி அச்சுறுத்துகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சமீபத்தில் உலக மக்களை கொத்து கொத்தாக காவு வாங்கிய கொரோனா வைரஸும் அந்நாட்டில் இருந்து வெளியானது தான். இந்த வைரஸ் திட்டமிட்டு சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாக உலக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.

இதுபோல தென்சீனக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றையும் சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக உரிமைக் கொண்டாடி வருகிறது சீனா. மிகப்பெரிய அணுசக்தி நாடு என்பதால் அமெரிக்கா கூட சீனாவிடம் சற்று அடக்கியே வாசித்து வருகிறது. இவ்வாறு உலகுக்கே அச்சுறுத்தலாக இருக்கும் சீனா, தனது ராணுவத்துக்கு நடப்பாண்டு 1.55 டிரில்லியன் யுவான் நிதியை (ரூ.18 லட்சத்துக்கு 33 ஆயிரம் கோடி) ஒதுக்கியுள்ளது.

அதே சமயத்தில், இந்தியா நடப்பாண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.5.94 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது. இதனுடன் ஒப்பிட்டால், சீனா 3 மடங்கு அதிகமாக தனது ராணுவத்துக்கு நிதி ஒதுக்கியிருக்கிறது. உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக ராணுவத்துக்கு அதிகமாக செலவிடும் நாடு சீனா மட்டும் தான். அதேபோல, உலகிலேயே மிகப்பெரிய ராணுவமும் சீனாவிடம்தான் உள்ளது. அந்நாட்டு ராணுவத்தில் 20 லட்சம் வீரர்கள் உள்ளனர். இந்திய ராணுவத்தில் 12 லட்சம் வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை சீனா தனது ராணுவத்துக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக நிதியை ஒதுக்கி இருப்பதை இந்தியா சற்று கவனமாக பார்த்து வருகிறது. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தையும், லடாக்கையும் கைப்பற்ற துடித்து வருகிறது சீனா. அருணாச்சலும் சரி, லடாக்கும் சரி, இயற்கை அரண்கள் நிறைந்த பகுதிகள். எனவேதான், இந்தப் பகுதிகளை கைப்பற்ற சீனா விரும்புகிறது. ஆனால், இந்தப் பகுதிகளை கைப்பற்ற சீனா எடுத்து வந்த அனைத்து முயற்சிகளை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்துள்ள சீனா, இந்திய எல்லைப் பகுதிகளில் தனது ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. மேலும், கடந்த மாதம் கூட ஒரு பெரிய போருக்கு தயாராகுங்கள் என இந்திய எல்லைக்கு அருகே நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *