ஹெலிகாப்டர், விமான நிலையம் என… வாக்குறுதிகளை அடித்துவிடும் சுயேச்சை வேட்பாளர்…!

அரசியல் கட்சியினரை அதிர வைக்கும் வகையில்  வாக்குறுதி அளித்து , ஈரோடு மக்களிடம்  பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சுயேச்சை வேட்பாளர். தான் வெற்றி பெற்றால் ஈரோட்டிற்கு விமான நிலையம் கொண்டு வருவேன் ஹெலிகாப்டர் தலம் அமைத்து தருவேன் இலவச வால் போக்குவரத்தை உருவாக்கித் தருவேன் என துண்டு பிரசுரங்கள் அச்சடித்து மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.  இதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர்  உச்சகட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் வேட்பாளர் தென்னரசு , தேமுதிக சார்பில் வேட்பாளர் ஆனந்த் , நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் மேனகா நவநீதன் ஆகியோர் அரசியல் கட்சி சார்பிலும்,   தவிர 73 பேர்  சுயேட்சை சின்னத்திலும்   போட்டியிடுகின்றனர். 

பிரச்சாரத்துக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே  உள்ள நிலையில்,  அரசியல் கட்சி வேட்பாளர்கள் சூறாவளியாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சுயேட்சையாக போட்டியிடும்  வேட்பாளர்களும் நூதன முறையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர் காந்தியவாதி ரமேஷ் என்பவர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளருக்கான மனு வழங்கும் போதே  டெபாசிட் தொகையான பத்தாயிரம் ரூபாயை ,  பத்து ரூபாய் காசுகளாக கொடுத்து அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தி மனு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு தலையணை சின்னம் ஒதுக்கப்பட்டது.  தற்போது தலையணையை தலையில் சுமந்தப்படி, தன்னந்தனி  ஆளாக தொகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் ஈரோட்டில்  ஜவுளி மற்றும்  மஞ்சள்  உற்பத்தியில் சிறந்து விளங்குவதால்,  தொழில்துறையை மேம்படுத்துவதற்காக ஈரோட்டில் விமான நிலையம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும்,  ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் என்றும் அதன் மூலம் வணிகம் மேம்பட  இலவச  வான் போக்குவரத்தை உருவாக்கித் தருவேன்  என்ற வாக்குறுதியை பிரதானமாக  அச்சிட்டு,  துண்டு பிரசுரங்களை மக்களை சந்தித்து  வழங்கி வருகிறார். 

மேலும் தலையணையுடன்  விமானம் வடிவமைப்பிலான  பொம்மையை தலையில் சுமந்தபடி ஈரோடு கிழக்கு தொகுதியில் வியாபாரிகளையும் ,  பொதுமக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது தான்,  வெற்றிப்  பெற்றால் ஈரோட்டிற்கு விமான நிலையம் கொண்டு வருவேன் எனக்  கூறி வாக்கு சேகரித்தார். அப்போது பெரிய பெரிய அரசியல் கட்சிகளே அறிவிக்காத வாக்குறுதிகளை சொல்லி , வாக்கு கேட்கிறீர்களே?  உங்களால் செய்ய முடியுமா? என வாக்காளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.  

நான் வெற்றி பெற்றால் நிச்சயம், போராடி  செய்து தருவவேன் என  உறுதி அளித்தவாறு , தொடர்ந்து வாக்கு  சேகரித்து வருகிறார். இவர் ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல்,  சட்டமன்றத் தேர்தல்,  நாடாளுமன்ற தேர்தல்,  குடியரசு தலைவர் தேர்தல் என சுமார் பத்து தேர்தல்களில் வேட்பு  மனுக்களை தாக்கல் செய்து போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *