பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிக்கு நாளை உதயநிதி ஸ்டாலின் வருகை..!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக நாளை காஞ்சிபுரத்திற்கு வருகைப்புரிந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கினை புதுப்பிக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திமுகவை தோற்றுவித்தவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு நாளை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிகிறார். தமிழக அமைச்சராக பொறுப்பேற்று முதல்முறையாக காஞ்சிபுரத்திற்கு வரும் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார்.
குறிப்பாக காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு முதலில் செல்லும் அவர் அங்குள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன் பிறகு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெறும் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.
அதன் பின் காஞ்சிபுரம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காரப்பேட்டை பகுதியிலுள்ள பிரபல தனியார் மருத்துவக்கல்லூரியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.
இந்நிலையில், அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக காஞ்சிபுரத்துக்கு வரும் உதயநிதி ஸ்டாலிலின் வருகையையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கினை புதுப்பிக்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு அப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கூட்ட அரங்கிற்கு புதிய வர்ணம் தீட்டுதல், மின்சாதனங்களின் பழுது நீக்கும் பணிகள், சுத்தம் செய்தல், கூட்டரங்கு அமைந்துள்ள பகுதிகளிலுள்ள தேவையற்ற புல் செடிகளை அகற்றுதல், அவ்வளாகத்தில் சுகாதாரத்தை பேணி காக்கும் பணிகளும் என அனைத்து விதமான பணிகளும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.