ஈரோடு இடைத்தேர்தல் வேட்பு மனு  தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் இன்று… 

வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாளான இன்று சுயேச்சைகள் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். தண்ணீர் குடத்தை தலையில் சுமந்த படியும், ரூபாய் நோட்டுக்களை மாலையாக அணிந்து கொண்டும் , சாமியார் கோலத்தில் வந்தும்  நூதன முறையில் வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு  தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று ஏராளமானோர் மனு தாக்கல் செய்ய வந்ததால் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உடனடியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது அதன்படி பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில்  ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு  தாக்கல் கடந்த 31ஆம் தேதி துவங்கியது. இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளாகும். 

இதனிடையே அதிமுக இரு அணிகளுக்கிடையே இருந்த சிக்கல் தீர்ந்து , அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் முடிவானது. இதனையடுத்து இறுதி நாளான இன்று  அதிமுக எடப்பாடி அணி சார்பில் வேட்பாளர் தென்னரசு இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் கே வி ராமலிங்கம், அதிமுக நிர்வாகிகள் பாவை அருணாச்சலம் , 

ரா. மனோகரன் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜா ஆகியோருடன் வந்த வேட்பாளர்   தென்னரசு , ஈரோடு மாநகராட்சி  ஆணையரும் ,தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சிவகுமார் அவர்களிடம் சரியாக நண்பகல் 12.15  மணிக்கு தனது வேட்டு மனுவை தாக்கல் செய்தார். வேப்பமணியில் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட்ட ஏ பி விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் இரட்டை விரலை காட்டிய வேட்பாளர் தென்னரசு அதிமுக வெற்றி பெறும் என தெரிவித்து விட்டு சென்றார். 

இதனைதொடர்ந்து சுயேச்சைகள் பலரும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். குறிப்பாக பெருந்துறை ,  பறையர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி பிரபாகரன் ,  தனது ஆதரவாளர்களுடன் வந்து  சுயேட்சையாக  வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது புதுக்கோட்டை ,  வேங்கைவயல்  பகுதியில் தண்ணீரில் மலம் கலந்த விவகாரத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்தும், அந்த விவகாரத்தில் இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கோரி,  அழுக்கு கலந்த தண்ணீர் குடத்தை  தலையில் சுமந்து கொண்டு மாநகராட்சி அலுவலகத்திற்குள் வந்தனர். 

அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் குடத்தில் இருந்த தண்ணீரை கீழே ஊற்றியதை அடுத்து, வேட்பு மனுவினை தாக்கல் செய்ய  உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 

இதே போல திருவாரூர் மாவட்டம் குடவாசல் சாமி  என்றழைக்கப்படும்  திருமலை ராமலிங்கம் , சாமியார் கோலத்தில் வந்து தனது வேட்பு மனுவை  தாக்கல் செய்தார். சாமியார் கோலத்தில் வந்த திருமலை ராமலிங்கம் தூய தமிழில் பேசி அனைவரையும்  கவர்ந்ததால் சிறிது நேரம் ஈரோடு  மாநகராட்சி அலுவலகத்தில் கலகலப்பு ஏற்பட்டது.

இதே போல அகில இந்திய ஊழல் கூட்டமைப்பு நிர்வாகி அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன் என்பவர் 20 ரூபாய்  நோட்டுக்களை மாலையாக அணிந்து கொண்டு வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கடைசி நாளான இன்று  சுயேட்சைகள் , அடுத்தடுத்து வந்து  தங்கள் மனுக்களை தாக்கல் செய்து வருவதால் , ஈரோடு மாநகராட்சி அலுவலகம் களைக்கட்டி உள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *