இரட்டை இலையா? அது இருந்தா என்ன இல்லனா என்ன? வெற்றி திமுக கூட்டணிக்குதான்… 

சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதியை குறைத்து உள்ளது, இதனால்  கிராமப்புறவளர்ச்சி பாதிக்கும்.  வேலைவாய்ப்பு குறித்து இந்த பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, இதை கண்டித்து பிப்ரவரி 27, 28ஆம் தேதியில் கண்டன இயக்கத்தை தமிழகம் முழுவதும் ஒன்றிய, நகர, மாவட்ட தலைநகரில் நடத்த கட்சி தீர்மானித்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலம் தவறி மழைபெய்ததின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மூன்று லட்சம் ஏக்கர் நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் நாசமாகியது. தமிழக முதல்வர் அவசரமாக தலையிட்டு  இரண்டு அமைச்சர்களை அனுப்பி வைக்க வேண்டும், மேலும் அதிகாரிகளைக் கொண்டு குழு அமைத்து ஆய்வு நடத்தி, தாமதமின்றி ஆய்வறிக்கையை பெற்று,  உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் 33 சதவீதம் சதவீதத்திற்கு கீழ் இழப்பு உள்ளவர்களுக்கு இழப்பீடு  இல்லை என்பது பெரும் வருத்தத்திற்குரிய ஒன்றாக உள்ளது. அவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு என்பது  தெளிவாக தெரிந்த ஒன்று. மதசார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். குறிப்பாக அதிமுகவின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை, வேட்பாளர் தேர்வு செய்து மனுதாக்கல் செய்வதற்குள் அதிமுக கட்சி திணறிவிட்டது. அதிமுக சிதறி கிடக்கிறது.  இவற்றை பாஜக ஒன்றாக்கி குதிரை  சவாரி செய்ய நினைக்கிறார்கள்,  அதற்கு வாய்ப்பு இல்லை என்றார்.

அதிமுக வேட்பாளருக்கு  இரட்டை இலை  சின்னம் கிடைத்தால் என்ன ,  இரட்டை இலையில்  நின்று  ஜெயலலிதாவே  தோற்று  உள்ளார்.  சின்னம்  பிரச்சினை அல்ல,  அதிமுக ஆட்சியின்  முறைகேடு ,  மக்கள் விரோத நடவடிக்கைகள், இன்றும் பாஜகவை தோளின் மீது சுமந்து கொண்டு செல்லும் மோசமான போக்கு போன்றவற்றை  தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, ஈரோடு மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கு,  பிரதானமாக இருப்பது அதிமுக ஆட்சி தான் காரணம். திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலம் தான் ஆகிறது. தமிழக அரசுக்கு பொருளாதார நிதிநிலை நெருக்கடி இருந்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில்  ஐந்தே முக்கால் லட்சம் கோடி கடனில் விட்டு வைத்து சென்றுள்ளனர். மின்சாரவாரியம், போக்குவரத்து கழகம்  உள்ளிட்டவைகள் முடங்கி போய்விட்டது.

படிப்படியாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்கள். பொருளாதார நிலைமை படிப்படியாக சீரான பிறகு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிச்சயம்  நிறைவேற்றப்படும்  என்றார்.  

திமுக ஆட்சி நீடிக்கும் வரை  திமுக கொடுத்த  கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று  கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக போராடும், பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில்,  அதிமுக பிஜேபியை வீழ்த்தவேண்டும் என்றால் திமுகவுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை, பிஜேபியை எதிர்க்கின்ற போராட்டத்தில் திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம், மக்கள் நலன் சார்ந்துள்ள பிரச்சனைகளில் மக்களின் சார்பாக திமுக அரசிடம் மக்களின் கோரிக்கைகளை வைத்து வாதாடுவோம், போராடுவோம் என்றார்.

கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் ஆளுமையாக திகழ்ந்தவர். அவருக்கு நினைவுச்சின்னம் வைப்பதில்  எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. பேனா நினைவுச் சின்னம் வைப்பது குறித்து அரசு தான் முடிவு எடுக்கவேண்டும் என்றும், எங்களைப் பொறுத்தவரை சின்னம் வைக்கும் போது சர்ச்சைக்குள்ளாகாமல், அது விவாத பொருளாகாமல் வைக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கருத்து என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *