‘செவ்வாய் கிரகத்தில் கூட கால் வைத்து விடலாம்… கோவில் கருவறைக்குள் முடியாது’ ஆசிரியர் கி.வீரமணி கோபம்…!

செவ்வாய் கிரகத்தில் கூட இன்றைய காலகட்டத்தில் மனிதன் கால் வைக்க முடிந்த நிலையில் கோவில் கருவறைக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்ல முடியாது என்பதை மாற்றி அமைத்தது தான் திராவிட மாடல் ஆட்சி என்று கூறிய திராவிட கழக தலைவர் கி.வீரமணி பழனி முருகனுக்கே தமிழில் குடமுழுக்கு விழா நடந்தது திராவிட மாடல் ஆட்சியில் தான் என தெரிவித்துள்ளார்.

திராவிட கழக தலைவர் கி. வீரமணி சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டத்தை  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தொடங்கினார். இந்த பயணம் இன்று தொடங்கி கடலூரில் வரும் 6ம் தேதி நிறைவு பெறவுள்ளது. இதனை தொடர்ந்து குமாரபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிட மாடல் ஆட்சி வளர்ச்சி சாதனையை குறித்து பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். 

அனைவருக்கும் அனைத்தும் என்பது தான் சமூக நீதியின் பொருள் என்னும் பெரியார் வழியில் தான் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக கூறினார். திராவிட மாடல் குறித்து தெரிந்தும் தெரியாதது போன்று உள்ள தமிழக பாஜகவினருக்கு உணர்த்த முடியாது என்றார். தமிழகத்தில் நிகழ்ந்து வரும் ஜாதி மறுப்பு திருமணத்தில் கூலிபடையால் நிகழும் ஆணவக்கொலை குடிநீரில் மனித கழிவுகள் கலக்கும் செயல் போன்றவற்றிக்கு பெரியார் என்னும் ஊசியால் மட்டுமே மருத்துவம் என்றார். 

இதனை தொடர்ந்து பேசிய கி. வீரமணி இன்றைய காலகட்டத்தில் செவ்வாய் கிரகத்தில் மனிதன் கால் வைத்த நிலையில் கூட கோவில் கருவறைக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்ல முடியாது நிலை என்பதை திராவிட மாடல் ஆட்சியில் தான் அனைத்து ஜாதினரும் அர்ச்சகர்கள் என்று கொண்டு வரப்பட்டது என தெரிவித்தார். 

புராண காலத்தில் சூதுவால் மனைவியை இழந்த நிலையில் தற்போது ஆன்லைன் சூதாட்டத்தால் காவல்துறை, பேராசிரியர் உள்ளிட்ட அனைவரும் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் கூட ஆளுநர் தபால்கார் வேலை பார்க்காமல் தபால் பிரித்து பார்க்கும் வேலை மட்டுமே பார்த்து வருவதாக விமர்சனம் செய்தார். 

சேது சமுத்திர திட்டம் நிறைவேறி இருந்தால் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைத்து இருக்கும் என கூறினார். தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில் தான் அதிக கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படுவதுடன்,பழனி முருகனுக்கே கோவிலுக்கு குடமுழுக்கு விழாவில் முதன் முறையாக தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது தான் திராவிட மாடல் சாதனை என்றார். பாஜகவை சேர்ந்த அண்ணாமலை இதுவரை தமிழகத்தின் எந்த பிரச்சினைக்கு குரல் கொடுத்துள்ளார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் எதிர்கட்சி என்று சொல்லிக்கொண்டு வரும் பாஜகவினர் ஏன் மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது குறித்து கேட்கவில்லை என கேள்வி எழுப்பினார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *