ஈரோடு இடைத்தேர்தலில் முடங்கியது அதிமுக… நீதிமன்றம் வைத்த செக்…!

வேட்பாளர் தென்னரசு.க்கு பொது குழு உறுப்பினர்கள் ஆதரவை பெற முயற்சி. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு மூலம்  தேர்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தென்னரசுவிற்கு ஆதரவை திரட்ட எடப்பாடி அணியினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் எடப்பாடி அணியும் ஓபிஎஸ் அணியும் வேட்பாளர்களை களம் இறக்கினர்.  இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் ஒருமித்த வேட்பாளரை தேர்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.  

இதனையடுத்து நேற்று நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலமாக ஆதரவு கடிதம் பெற்று தென்னரசுவை வேட்பாளராக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்றும் நாளையும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் சுற்றறிக்கை வழங்கப்பட்டு ஆதரவு கடிதம் பெறப்படுகிறது.. 

ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பாகவே தேர்தல் பணிகளை தொடங்கியிருந்த எடப்பாடி அணியினர் பூத் கமிட்டி கூட்டம் பகுதி கழக நிர்வாகிகள் கூட்டம் முடித்து  வாக்காளர் பட்டியலையும் வீடு வீடாக சரிபார்த்து இருந்தனர். நேற்று தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கும் தொடர்ச்சியாக பிரச்சாரங்களை முன்னெடுக்கவும் ஆயத்தமாகி இருந்தனர்.  

இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் வேட்பாளர் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் தேர்தல் பணிகளை தொடர முடியாமல் அதிமுகவினர் முடங்கியுள்ளனர்.  உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி,  பொது குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் தென்னரசுவை வேட்பாளராக்கி இரட்டை இலை சின்னம் பெற்றதற்குப் பிறகு தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். இதனால் கடந்த சில தினங்களாக வேகமெடுத்திருந்த  அதிமுக தேர்தல் பணிகள் இரு தினங்களாக சுணக்கம் அடைந்துள்ளன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *