தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளே இல்லை… தேவையும் இல்லை… சுப. வீரபாண்டியன் நறுக்

தமிழ்நாட்டில் மக்களை மதத்தால் பிரிக்கும் சூழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மீஞ்சூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற சுப. வீரபாண்டியன் பேச்சு. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதற்கு உரிய செயல்கள் நடக்கவில்லை எனவும், எதிர்க்கட்சிகள் அவர்களுக்கான பிரச்சினையை பேசி தீர்ப்பதற்கே நேரமில்லை எனவும் விமர்சனம்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வள்ளுவர் நகரில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அமர்ந்த நிலையில் ஒருகையில் எழுத்தாணி மற்றொரு கையில் ஓலைச்சுவடியுடன் உள்ள திருவள்ளுவரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டது. இந்த திருவள்ளுவரின் முழு உருவ சிலையை தமிழ்நாடு அரசின் சமூகநீதி கண்காணிப்பு குழு தலைவர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். 

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சுப.வீரபாண்டியன் திருவள்ளுவரின் சிலை இந்த இடத்திற்கு மட்டும் அடையாளமாக இல்லாமல், வாழ்க்கைக்கே வள்ளுவர் அடையாளமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். திருக்குறள் முப்பாலை கொண்டதாக இருந்தாலும், திருக்குறள் அறத்துப்பாலே எனவும் அறம் சார்ந்து இருப்பதால் காமத்து பாலும், அறத்துப்பாலே, அறம் சார்ந்து எழுதியதால் பொருட்பாலும் அறத்துப்பாலே என்றார். 

2010ஆம் ஆண்டு செம்மொழி மாநாட்டிற்கு இலச்சினையில் என்ன வார்த்தையை வைப்பது என்ற விவாதத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகத்தை கலைஞர் பரிந்துரைத்ததை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பேசிய சுப.வீரபாண்டியன் தமிழ்நாட்டில் தான் சிலை வைக்கும் கலாச்சாரமும், சிலை உடைக்கும் கலாச்சாரமும் அதிகமாக உள்ளது என்றார். சிலை கண்டு வாழ்த்துபவர்களாகவும், சிலை கண்டு அஞ்சுபவர்களாகவும் இருப்பதாக தெரிவித்தார். சிலைகள் வழிபடுவதற்காக நிறுவப்படுவது இல்லை எனவும், அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவதற்காக என தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் சாதியால் பிரித்தாயிற்று எனவும், தற்போது மதத்தால் பிரிக்கும் சூழ்ச்சி நடப்பதாக கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுப.வீரபாண்டியன் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் எதிர்த்து பேசுவதற்கு இல்லை என்பதை விட எதிர்கட்சிகளே இல்லை என தோன்றுவதாகவும், எதிர்க்கட்சிகள் அவர்களுக்கான பிரச்சினையை பேசி தீர்ப்பதற்கே நேரம் இல்லாமல் இருப்பதாக சாடினார். மேலும் தமிழ்நாட்டில் எதிர்ப்பதற்கு உரிய செயல்கள் அதிகம் நடக்கவில்லை என்றார். 

தமிழ் வழக்காடு மொழி குறித்த கேள்விக்கு தமிழ் மொழி உள்ளிட்ட பல மொழிகளிலும் தீர்ப்புகள் வரும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது எனவும் தமிழில் அறிவியல் நூல்கள் வரத்தொடங்கியுள்ளன எனவும் ஒரே நாளில் அனைத்தும் முடிந்து விடாது எனவும் படிப்படியாக திராவிட மாடல் ஆட்சியில் நடக்கும் என்றார். தமிழ்நாட்டில் இன்னொரு மொழி வேண்டாம் எனக் கூறவில்லை எனவும் தமிழ் மொழி கண்டிப்பாக வேண்டும் எனவும் 

தமிழ்நாட்டை பொருத்தவரை இரு மொழி கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் தமிழை உயிராய் நேசிப்போம் , ஆங்கிலத்தை புறக்கணித்து விட வேண்டாம் எனவும் மும்மொழி கொள்கை எப்போதும் வேண்டாம் என்றார். திராவிட மாடல் என்ற சொற்களை வைத்து கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் எனவும் மக்களிடம் பரவியதால் அந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *