எங்கிருந்தோ வந்தான், இடைக்கால பொதுச்செயலாளர் நான் என்றான்… பாட்டாக பாடிய முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணன்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நியமித்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில்  உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜேசிடி.பிரபாகரன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட  88 மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே கூட்டம் நடக்கும் அறங்கத்திற்க்குள் அனுமதி என்று கூறப்பட்டதால் திருமண மண்டபத்திற்கு வெளியே தொண்டர்கள் குவிந்து இருந்தனர் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த தொண்டர்கள் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணன் பேச்சு: வரலாற்றில் பொன்னாளாக இது பொறிக்கப்படும். 1988 ஐனவரி , 1 அன்றுதான் புரட்சித்தலைவி அம்மா பொதுச்செயலாளராக பிரகடனப்படுத்தப்பட்டார். அதிமுக – திமுகவுடன் இணைய போவதாக செய்தி வந்தவுடன் எம்ஜிஆருடன் பேசி நங்கூரமிட்டு நிறுத்தியவர் பண்ருட்டியார்.

பொதுக்குழுவில் பன்னீர் செல்வத்தின் ஆற்றல் வெளிப்பட்டது , சுற்றி திரிந்த சிறு நரிகளை ஓட விட்டு அர்ஜூனணாக மேடையில் இருந்து  இறங்கி வந்தார் ஓ.பன்னீர் செல்வம். வரும் காலத்தில் என் தலைமுறையே பன்னீர் செல்வம் பின்னால் நிற்கும். 

தேர்தல் போர்க்களம் நம் அருகில் இருக்கிறது , நெஞ்சு நிமிர்த்தி நாங்கள் மாவட்ட செயலாளர்கள் என்று பொதுமக்களிடம் செல்லுங்கள். நீதிமன்ற வழக்கு முடிந்த பிறகு பன்னீர் செல்வம் பக்கம் வருவதாக பலர் கூறுகின்றனர் , நீதிமன்றத்தில் நீதி நமக்குதான் கிடைக்கும்.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒற்றைத் தலைமையாக பன்னீர் செல்வம் இருக்கின்றார். கிளைச் செயலாளர்கள் வரை அனைவரும் ஓபிஎஸ்க்கு கட்டுப்பட்டவர்கள். எங்கிருந்தோ வந்த எடப்பாடி தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் என்கிறார். 

இலக்கியங்களில் முதல் சங்கம், இரண்டாம் சங்கம் பார்த்துள்ளோம் , இடைக்கால சங்கம் எங்கிருந்து வந்தது. பழனிச்சாமிக்கு எம்ஜிஆர், நாவலர் நெடுஞ்செழியன், அம்மா போன்றவர்கள் பெரிய தலைவராக தெரியவில்லை.

அதிமுகவிற்கு பழனிச்சாமி ஆற்றிய பணி என்ன ..? 1989 ல் சேவல் , புறாவாக பிரிந்து தேர்தலை சந்தித்து தோல்வி அடைந்தது , பிறகு கட்சி தானாகவே இணைந்தது. கருணாநிதி முதல்வாராக இருந்தபோதும்  மதுரை கிழக்கு , மருங்காபுரி என 2 இடைத்தேர்தலில் அதிமுக வென்றது. அப்போது யாரிடமும் பணம் இல்லை , என்றாலும் தொண்டர்கள் இணைந்து கட்சியை வெற்றி பெற வைத்தனர். 

ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் இரு தொகுதிகளை கொடுத்துள்ளோம் , ஒன்று உங்களுக்கு மற்றொன்று  கட்சிக்கு, இந்த ராஜதந்திரம் வேறு எந்த தலைவனுக்கு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *