அதிமுக ரத்து செய்த முதியோர் உதவி தொகையை திமுக அரசு வழங்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

தேனி மாவட்டம் கம்பம் நகரில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று இரவு பார்த்திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி ஆறு லட்சம் கோடி ரூபாய்  கடனில் விட்டு சென்றது. அதில் ஒன்றரை லட்சம் கோடி மின்வாரியத் துறையில் மட்டும் கடன். இந்த கடனை தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தான் செலுத்தி வருகிறார். 

வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கான தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வருகின்ற திங்கள்கிழமை முதலமைச்சர் அறிவிப்பார்.

கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த 12,420 கோடி விவசாய கடன் தள்ளுபடியில், தற்போது திமுக அரசு ஐந்தாயிரம் கோடி ரூபாய்  வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கடன்களும் தள்ளுபடி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் தமிழகத்தில் 20 ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளேன்.

அதிமுக ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஆர் பி உதயகுமார் முதியோர் உதவித் தொகையை ரத்து செய்தார். அதனால் தற்போது பலர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தற்போதுள்ள திமுக அரசு அனைத்து முதியோர்களுக்கும்  உதவித்தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.‌

மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய்  கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு பாதிப்படைந்தது. ஆனால்  தமிழக முதல்வராக இருக்கும் ஸ்டாலின் நடவடிக்கையால் 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது. இதனால் அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவ படிப்பு படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஐ. பெரியசாமி பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில்  திமுக எம்.எல்.ஏக்கள் கம்பம் –  இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி – மகாராஜன் மற்றும் தேனி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *