ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வி.சி.க நபரை தாக்கிய அதிமுகவினர்

அதிமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி அதிகாரியை சந்தித்த வி.சி.க பிரமுகர் மீது தாக்குதல் என புகார். அரசு அலுவலகத்திற்குள் புகுந்து, தகாத வார்த்தைகளால் பேசும் அதிமுக பிரமுகரின் வீடியோ வைரல். 

அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு. ஈரோடு அருகே, அதிமுக பிரமுகர் ஆக்கிரமித்த நிலத்தை மீட்டு, வீடற்ற ஏழைகளுக்கு வழங்க கோரி, அதிகாரியை சந்தித்து பேசியவரை,   அரசு அலுவலகத்திற்குள் புகுந்து தாக்கி, மிரட்டல் விடுக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. 

ஈரோட்டை அடுத்த வள்ளிபுரத்தான்பாளையத்தில், சுமார் 7 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை, அதே ஊரில் வசிக்கும் அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட பொருளாளர் வி.பி. அப்பாத்துரை ஆக்கிரமித்துள்ளார் என்பது கிராம மக்களின் புகார். 

இந்த நிலத்தை மீட்டு வீடற்ற அதே ஊரை சேர்ந்த ஏழை மக்களுக்கு வீட்டு மனைகளாக வழங்க வேண்டும் என பொதுமக்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மாவட்ட ஆட்சியரிடம் பல ஆண்டுகளாக மனுக்களை அளித்து வருகின்றனர். 

இந்நிலையில் இது தொடர்பாக விசிக பிரமுகர் விஜயபாலன், கிராம நிர்வாக அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து பேசுவதற்காக கடந்த வாரம் ஊர் பிரமுகர்களுடன் நேரில் சென்றுள்ளார்.. அப்போது அங்கு வந்த அதிமுக பிரமுகர் அப்பாத்துரை, சாதி பெயரை சொல்லியும், அதிகாரிகளை இழிவாகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி உள்ளார். பின்னர், விஜயபாலனை அங்கிருந்த நாற்காலியை தூக்கி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

அப்பாத்துரை அரசு அலுவலகத்திற்குள் புகுந்து மிரட்டல் விடுக்கும் காட்சிகளை உடன் இருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். இது குறித்து வெள்ளோடு காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். 

இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள் அதிமுக பிரமுகர் அப்பாத்துரை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர். மேலும் அவரிடம் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு விட்டு மனைகளாக வீடற்ற தொழிலாளர்களுக்கு வழங்கவும் கோரிக்கை விடுத்தனர். 

இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து புகார் அளித்தனர். மனுவை பெற்ற DRO, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *