காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் யார் என நாளை தெரியும் – ஜெயராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் யார் என்று நாளை மாலை தெரியும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கூடலூரில் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மூலம் காங்கிரஸ் கட்சியினருக்கு புதிய உற்சாகம் அளிக்கும் விதமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை பயணம் இன்று நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது 22 வது நாளாக பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்று வருகின்றது எனவும், இது யாத்திரை நாளை காலை கர்நாடகா மாநிலத்தில் நடக்க இருக்கின்றது எனவும் தெரிவித்தார். 

இதுவரை தமிழகத்தில் 57 கி.மீ தூரம், கேரளாவில் 353 கி்மீ நடைபெற்று இருக்கின்றது எனவும் தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து 24 நாளாக கர்நாடகாவில் நாளை  நடைபெறுவதாகவும் இதனை தொடர்ந்து ஆந்திரா மாநிலத்தில் 4 நாட்கள், ம.பியில் 16 நாட்கள், உபி யில் 5 நாட்கள், டெல்லி 2 நாட்கள்,  ராஜஸ்தான்  21 நாட்கள், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் தலா 5 நாட்கள் என பாரத்ஜோடா யாத்திரை தொடர்ந்து நடைபெற இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

1400-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பக்தி இயக்கம் போல இந்த  பாரத்ஜோடோ யாத்திரை  நடத்தப்படுவதாக தெரிவித்த அவர், தினமும் 22 கி.மீ தூரம் , 10 மணிநேரம் ராகுல்காந்தி நடக்கின்றார் எனவும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம்  காங்கிரஸ் கட்சியினரை  ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

பொருளாதார சமநிலையின்மை, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்ற பிரச்சினைகள், கலாச்சாரம்,உணவு, உடை ,இனம், மொழி போன்றவற்றை வைத்து பிரிவினை செய்வது, ஒரு நபரை முன்னிறுத்தி சர்வஞானி, சர்வசக்தி என பிரச்சாரம் செய்வது போன்றவற்றிக்கு எதிராகவே இந்த பாரத் ஜோடோ யாத்திரை நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். பாஜக ஆட்சியில் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றது, மத்திய அரசு என்ற ஓரே இடத்தில் அதிகாரம் குவிகின்றது எனவும், நீட் தேர்வு காரணமாக  மாணவர்கள்  உயிரிழக்கின்றனர் என தெரிவித்த அவர், பாரத்ஜோடா யாத்திரை மூலம் பிரதமர் மோடியையும் அவரது பாலிசியையும் எதிர்த்து மக்களிடம் அவற்றை அம்பலப்படுத்தவே இந்த யாத்திரை நடத்தப்படுகின்றது என்றார்.

கேரளாவில் பாரத் ஜோடோ யாத்திரைக்கு மிகச்சிறப்பான வரவேற்பு இருந்தது என தெரிவித்த அவர், இது  கர்நாடகாவிலும் மிகச்சிறப்பாக  இருக்கும்  எனவும் தெரிவித்தார். ராகுல்காந்தி  கூடலூரில் இன்று சிறுகுறு தொழில் முனைவோர் மற்றும் பழங்குடியினருடன்  கலத்துரையாடினார் எனவும், சிறு குறு தொழில் முனைவோர் ஜிஎஸ்டியால் சிறு தொழில்கள் கடுமையாக  பாதித்ததாக புகார் கூறியதாகவும் கூடலூரில்  பழங்குடியினருக்கு 1964 ல் வழங்கப்பட்ட நிலம் குறித்த பிரச்சினைகளை ராகுல்காந்தியிடம் முறையிட்டதாக தெரிவித்தார்.

இந்த பாரத்ஜோடோ யாத்திரை கூடலூரில் இருந்து நாளை  காலை 8.30 மணிக்கு கர்நாடகாவை நோக்கி செல்வதாக தெரிவித்த அவர், இந்த யாத்திரை பா.ஜ.க வை சலனப்படுத்தி இருக்கின்றது,  2024 ல்  புதிய பாதை அமைக்கும் விதமாக  இந்த ஒற்றுமை பயணம் அமைந்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி தலைவருக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகின்றது என்ற அவர், காங்கிரஸ் கட்சி முழுமையும் தற்போது பாரத் ஜோடோ யாத்திரையில்  கவனம் செலுத்துகின்றது எனவும் தெரிவித்தார். குறிப்பாக காங்கிரஸ் கட்சி மட்டும்தான் ஜனநாயகப்படி தேர்தல் நடத்தும் இயக்கம் என்ற அவர், நாளை மாலை வரை காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான மனு தாக்கலுக்கு  நேரம் இருக்கின்றது, மனுதாக்கல் செய்தவர்கள் வாபஸ் வாங்கலாம், வேட்பு மனு பரிசீலனை இருக்கின்றது என்றார்.

கர்நாடக மாநிலத்தில் பாரத் ஜோடோ பயணத்தை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, பா.ஜ.கவினர் மோசமான நடவடிக்கைகள் அனைத்தையும் செய்து இந்த பாரத் ஜோடோ யாத்திரையை இழிவு படுத்த முயற்சிக்கின்றனர் எனவும், ஆனால் மக்களிடம் இந்த யாத்திரைக்கு  பெரும் வரவேற்பு இருந்து வருகின்றது எனவும் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சி எப்போதும் வகுப்பு வாதத்திற்கும் எதிரான கட்சி என்றும்  தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *