விரைவில் பாடப்புத்தக்கத்தில் திராவிட மாடல் குறித்து பாடம்; அண்ணாமலைக்கு அதிரடி பதிலடி கொடுத்த பொன்முடி!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிறைவு நிகழ்ச்சி மற்றும் பெரியார் பிறந்த நாளான சமூக நீதி நாள் விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பெரியார் அரங்கத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த சமூகநீதி நாள் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, “சமூக நீதி மற்றும் சமத்துவம் இரண்டும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 
அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய இட ஒதுக்கீட்டை வழங்கியது சமூக நீதியாக உள்ளது. மத்திய அரசுப் பணிகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை கலைஞர் தான் பெற்று தந்தார். தமிழகத்தின் சமூக நீதி வரலாற்றை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். பிறருக்கு சொல்லித் தரும் நிலையில் இருக்கிறீர்கள். சமூக நீதி என்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும். அனைத்து சமுதாயத்தினரும் முன்னேற பாடுபட வேண்டும்.
 
ஒரே நாடு ,ஒரே மொழி, ஒரே மதம், ஒரே ஜாதி ஒரே சாப்பாடு என சொல்கிறார்கள். சாப்பாடு ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்க முடியும். இது இந்த நாட்டிற்கு சரியாக வராது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வரும் ஆண்டு முதலே பாடப் பிரிவுகளில் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி ஆகியோரை குறித்து திராவிட மாடல் வரலாற்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர் பாஜக அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் முறையான சரியான ஆதாரங்கள் இல்லாமல், புள்ளி விவரங்கள் இல்லாமல் பேசி வரும் அண்ணாமலைக்கு பதில் தர இயலாது, சரியான தரவுகளுடன் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன் என்று அமைச்சர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *