1 டூ 12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் வரலாறு; அமைச்சர் பொன்முடி அதிரடி!

சமத்துவத்திற்காக போராடிய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் திராவிட வரலாறு குறித்து மாணவர்கள் அனைவரும் அறியும் வண்ணம் அடுத்த ஆண்டு முதல் பாட நூல்களில் பாடப்பிரிவு கொண்டுவரப்படும் என சேலம் பெரியார் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிறைவு நிகழ்ச்சி மற்றும் பெரியார் பிறந்த நாளான சமூக நீதி நாள் விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பெரியார் அரங்கத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த சமூகநீதி நாள் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியார் பற்றிய தவறான பிம்பத்தை இளைஞர்கள் மாற்றியமைக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சமூக நீதி பாடத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வர வேண்டும். பல வரலாறு மறைக்கப்பட்டு விட்டது. அதை மாற்றியமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
 
ஜாதியை ஒழிக்க பாடுபட்டவரை கடவுள் மறுப்பாளர் என கூறுவது தவறு. கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது, படித்து முடித்த பெண்களுக்கு திருமணம் நிதி உதவித் தொகை வழங்கினார். பெண் கல்வியை ஊக்குவிக்க தாயைப் போல கலைஞர் செயல்பட்டதால் உயர்கல்வி சதவீதம் உயர்ந்துள்ளது. சமூக நீதியை நிலைநாட்டுவது போல கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் புதுமைப் பெண் திட்டத்தை கொண்டு வந்து கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கி வருகிறார். இடஒதுக்கீடு எப்படி வந்தது என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

10 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்த போது பெரியார், அண்ணா மிகப்பெரிய போராட்டத்தை தமிழகத்தில் நடத்தினர். தந்தை பெரியார் இல்லையென்றால் இடஒதுக்கீடு வந்திருக்காது என்று பேசிய சபாநாயகர் ,
பல சமூகங்களை உள்ளடக்கி கலைஞர் இடஒதுக்கீடு வழங்கினார். தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ், கலைஞர் ஒருவருக்கு மட்டுமே பாராட்டு விழா நடத்தினார்.

பின்னர் அதற்கும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்ற சவால் ஏற்பட்டது. 8 லட்ச ரூபாய்க்கு ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்றால் நியாயமா? 5 லட்சம் ஆண்டு வருமானம் இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டும். வரி செலுத்துபவர்களின் பிள்ளைக்கு முன்னுரிமையா, சாமான்யர்கள் குடும்பத்து பிள்ளைக்கு முன்னுரிமையா? என்ற விவாதம் உள்ளது .
 
மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்டப்படுகிறது. இது மனவேதனையைத் தருகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது இளைஞர்கள் கையில் தான் உள்ளது எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *