மருத்துவக் கல்லூரிக்கு விதியை மீறி அனுமதி, விஜயபாஸ்கருக்கு வந்த சோதனை

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முறைகேடாக அனுமதி வழங்கிய விவகாரம் தொடர்பாக திருவள்ளூர் அருகே வேல்ஸ் மருத்துவக் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் 13 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர், தாம்பரம், சென்னை, மதுரை, தேனி, புதுக்கோட்டை என 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த மஞ்சங்கரனையில் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. 

300 படுக்கைகளுடன் உள்நோயாளிகள் பிரிவு என இங்கு மருத்துவமனை இயங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த மருத்துவக் கல்லூரிக்கு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முறைகேடாக அனுமதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் ஆறு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

ஆலந்தூர் டிஎஸ்பி லவக்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு குழுவினர் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி அலுவலகம் உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தி வருகின்றனர். மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு விதிகளுக்கு புறம்பாக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 

150 மாணவர்களுடன் இயங்கக் கூடிய வகையில் செயல்படும் இந்த மருத்துவக் கல்லூரிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ கவுன்சிலின் விதிகளுக்கு புறம்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எஸன்சியாலிட்டி சர்டிபிகேட் வழங்கியதான குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில் மருத்துவ கல்லூரியில் உள்ள அனுமதிக்கான ஆவணங்கள் குறித்து தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. 

மருத்துவமனை அலுவலகம், மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலகம், நர்சிங் கல்லூரி ஆகியவற்றில் இந்த லஞ்ச ஒழிப்புக்கு குழுவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *