அரசியல் லாபத்துக்காக மக்களை திசை திருப்ப வேண்டாம்: அண்ணாமலை காட்டம்!!!

அரசியல் உள்நோக்கம் உள்ளபல போராட்டங்களை ஊக்குவித்து,தமிழக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட திமுக காரணமாக இருந்தது. இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, போராடுபவர்களை வசைபாடுகிறது.

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக கடந்த 2000-ம் ஆண்டு சாலை விரிவாக்கம் நடந்தபோது, அதை மக்கள் வரவேற்றனர். அதே மக்கள் இன்று தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சமுதாயத்தில் திமுக வளர்த்துவிட்ட விஷச் செடிகளே இதற்கு காரணம்.

தமிழகத்தில் 5 நகரங்களை இணைக்கும் பாதுகாப்பு வழித்தடத்தின் முக்கிய புள்ளி சேலம் நகரம். இதை விரிவாக்க திட்டமிட்டபோது, அன்றைய எதிர்க்கட்சியான திமுக எதிர்த்தது. இப்போது 8 வழிச்சாலை சரியான திட்டம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உணர்ந்துள்ளதால், இதுவரை மக்களிடம் தெரிவித்த உண்மைக்கு மாறான தகவல்களுக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால், சென்னையில் ஒரு புதிய பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் 2016-ல் தெரிவித்திருந்தார். 2019 நவம்பர் மாதம் இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் புதிய விமான நிலையம் கட்டுவதற்கு தேர்வாகியுள்ள இடங்கள் பரந்தூர் அல்லது மாமண்டூர் என்று மாநில அரசு குறிப்பிட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மாமண்டூரை நீக்கிவிட்டு திருப்போரூர், பரந்தூர், படாளம், பன்னூர் ஆகிய 4 இடங்களை தேர்வு செய்து அனுப்பியது. இந்த பரிந்துரைப்படி, புதிய விமான நிலையத்துக்கு பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

இந்த சூழலில், ‘புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, பரந்தூர் மக்களுக்கு நிலத்தை வழங்குகிறோம், இழப்பீடு கொடுக்கப்படும்’ என்று திமுக கூறும் வாக்குறுதியை மக்கள் நம்பத் தயாராக இல்லை. தேர்தல் வாக்குறுதியையே நிறைவேற்றாத திமுக அரசு, பரந்தூர் மக்களுக்கு தரும் வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றும் என்று அந்த மக்கள் எப்படி நம்புவார்கள்.

அவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை திமுக உடனடியாக வழங்க வேண்டும். அவர்களுக்கு சரியான குடியிருப்பு பகுதிகளை அமைத்துக் கொடுத்துவிட்டு, விமான நிலையத்துக்கு நிலம் கேளுங்கள். தமிழகத்தில் குறைந்து வரும் முதலீடுகளை கண்ட பிறகாவது, இனியும் அரசியல் லாபத்துக்காக மக்களை திசை திருப்பாமல் தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்காக திமுக பாடுபட வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *